இதுதான் கடைசி தேதின்னு மத்திய அரசு கன்பார்ம் செய்துட்டாங்க. ஆனால் மௌனம் தான் என் மொழி என்பது போல் தமிழக அரசு வாய் திறக்காமல் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பசிக்கும் போது சாப்பிட்ட பழையது இருந்தால் போதும். நாங்கள் என்ன பிரியாணியா கேட்கிறோம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு வரும் 31-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய என மத்திய அரசு கெடு விதித்து அறிவித்து விட்டது. ஆனால் தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, நிகழாண்டு குறுவைக்கு பயிர்க் காப்பீடு இருக்கா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் வேதனைக்குரல் எழுப்புகின்றனர்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் விளைச்சல் உண்டு. இதன்படி, டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு நடப்பாண்டு இதுவரை 5.20 லட்சம் ஏக்கர் வரை இலக்கை மிஞ்சி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் குறுவை தொகுப்புத் திட்டம் ஆகியவற்றை அரசு வழங்கியதால் கிடுகிடுவென்று விவசாயிகள் குறுவை சாகுபடியில் இறங்கி இலக்கை மிஞ்சி விட்டனர்.

குறுவை சாகுபடி என்பது ஜூலை 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு நடவு செய்யும் பருவம் சம்பாவில் எடுத்துக் கொள்வது வழக்கம். குறுவையில் மகசூல் இழப்பு, பேரிடர் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் விவசாயிகளுக்கான பாதிப்பை ஓரளவுக்கு குறைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், டெல்டாவில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியில் மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதால், அதற்கான இழப்பீடு தொகையை காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி வருகின்றன. எனவே, காப்பீடு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த காப்பீடு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு (2020-2021) குறுவை சாகுபடிக்கு எந்த காப்பீடு நிறுவனமும் காப்பீடு திட்டத்தில் பங்கேற்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னர் தமிழக அரசு, காப்பீடு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சம்பாவுக்கு மட்டும் பயிர்க்காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதுவும் பல்வேறு குளறுபடிகளுடன் நடக்க விவசாயிகள் போராட்டம் நடத்தியது தனிக்கதை.





இந்நிலையில் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டு, குறுவை நடவுப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதற்கிடையே  பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டு விட்டது. குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கான காலம் முடிவடைய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசு குறுவைக்கு காப்பீடு குறித்து இன்னும் கனத்த மௌனம் சாதித்து வருகிறது. இதனால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர். கடைசி நேரத்தில் கூறி பல பிரச்னைகளுக்கு உள்ளாவதை விட விரைந்து செயல்பட்டு இருந்தால் இந்நேரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்தி இருப்பார்கள்.

இதற்கு மேல் தமிழக அரசு அறிவித்தாலும், விஏஓ.விடம் சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்களில் பயிர்க் காப்பீடு செய்ய போதிய அவகாசம் இல்லை. இந்தாண்டும் குறுவைக்கு பயிர்க் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் போகும் நிலை உள்ளது என்று  விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், நாங்கள் பசிக்கும் போது பழைய சாப்பாடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். பிரியாணி சாப்பிட ஆசைப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குழந்தையை பெற்றெடுக்கும் தாயின் மறுபிறப்பு போல் நாங்கள் சாகுபடியை மேற்கொள்கிறோம். அதில் பயிர் காப்பீடு செய்வதில் இப்படி காலதாமதம் செய்தால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்புகின்றனர்.




விவசாயிகளுக்கு சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாக்க பயிர்க் காப்பீடு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை மத்திய, மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்போடு பயிர்க் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்தாண்டு குறுவை சாகுபடியில் பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சம்பா பருவத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது.

பயிர்க் காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு இதுவரை அறிவிக்கப்படாத காரணத்தால், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடனும் வழங்கவில்லை. தனியாரிடம் வட்டிக்கு வாங்கி சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஜூன் 7-ம் தேதி நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பயிர்க் காப்பீடு திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். இதுவரை அறிவிப்பு வரவில்லை. எனவே, இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம் உண்டா, இல்லையா என தமிழக அரசு உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் பயிர்க் காப்பீடு கெடு முடிய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் கடைசி நேர இணையதள சர்வர் பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண