பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் முக்கிய பங்காற்றிய நெல் ஜெயராமனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

 

தமிழகத்தில் இயற்கை விவசாயம் என்ற வார்த்தைகளுக்கு வழி கொடுத்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அவரின் அடுத்த வாரிசாகவே இது நாள் வரை வாழ்ந்து வந்தார் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவராக பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த பயணத்தின் போது தான் மரபு நெற்பயிர்களை மீட்டெடுக்கும் களப்பணியில் ஈடுபட்டார். தமிழகத்தில் மெல்ல மெல்ல காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் தான் நெல் ஜெயராமன்.


 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகில் இருக்கும் கட்டிமேடு என்ற பகுதியில் பிறந்து வளர்ந்தவர் நெல் ஜெயராமன். தன் வாழ்நாளில் 174 பாரம்பரிய நெற்பயிர்களை மீட்டிருக்கிறார். பாரம்பரிய விவசாயம் தொடர்பாக கருத்தரங்குகள் நடத்தி வந்ததோடு, வேளாண்மை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வந்தார்.

 



 

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்த நெல் ஜெயராமன் 15.4.1968 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். இயற்கை விவசாயத்திற்காக தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் குரல் எழுப்பி வந்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு இன்று 55 வயது. வேளாண்மையில் ரசாயன உரங்கள் தெளித்து உற்பத்தி அதிகரிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நெல் ரகங்கள் புதிது புதிதாக உற்பத்தியான போது நமது முன்னோர்கள் பாரம்பரியமாக செய்து வந்த இயற்கை முறை வேளாண்மையும், பயிரிட்டு வந்த பாரம்பரிய  நெல் ரகங்களும் வழக்கு இழந்து போயின. இதன் காரணமாக, அரிசியின் தரம் குறைந்த நேரத்தில் நம்மாழ்வார் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தார். அதனை களத்தில் செயல்படுத்திய மாமனிதர் நெல். ஜெயராமன், சுமார் 174 நெல் ரகங்களை மீட்கும் பணியில் தொடர்ச்சியாக செயல்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். 

 

விவசாயிகள் இடத்தில் சுழற்சி முறையில் உற்பத்தி செய்த பாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து, அதனை மேலும் விரிவுபடுத்தி தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று பாரம்பரிய நெல் சாகுபடியை செய்திட அடித்தளமிட்டவர்.  தொடர்ச்சியாக புற்றுநோய் தாக்கத்தால் தொடர் சிகிச்சையில் இருந்த போதும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மாநில முழுக்க நெல் திருவிழாக்கள் இன்றைய தினம் நடைபெற்று வந்தாலும் இப்படி ஒரு திருவிழாவை நடத்தி தேசிய அளவில் நெல்லின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சி தான் இன்று தமிழக முழுவதும் பரவி கிடக்கிறது. 



 

நெல் ஜெயராமன் அவர்களின் அளப்பரிய முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசு நெல் ஜெயராமன் பெயரால் அங்கக வேளாண்மை திட்டத்தை தொடங்கியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியை தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்திற்காக பாடுபட்டவர் நெல் ஜெயராமன் அவரது பிறந்தநாளில் தொடர்ந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.