ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திடம் ஓஎன்ஜிசி நிர்வாகம் விண்ணப்பம் அளித்தது. கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்து மன்னார்குடி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், கச்சா எண்ணெய் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஓஎன்ஜிசிக்கு அனுமதிக்க கூடாது என கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 2020ம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ONGC புதிய கிணறுகள் அமைக்கவும், ஏற்கனவே பேரழிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டு மூடப்பட்ட கிணறுகளை இனி செயல்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது காவிரி டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு திடீரென நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததாக செய்தி வெளிவந்தது. அதனை எதிர்த்து போராடிய போது தமிழக முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு அவ்வாறு அறிவிப்பு செய்தது தவறானது அதனை திரும்ப பெறுகிறோம் என்று அறிவித்தார். அதன்படி திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக கிணறு தோண்டும் பணி நிறைவடையும் நிலையில் கட்டுக்கடங்காத எரிவாயு வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் பேராபத்து ஏற்பட்டு மோசமான நிலை ஏற்பட்டது. உடனடியாக அந்தக் கிணறு மக்கள் போராட்டத்தினால் தடை விதிக்கப்பட்டது. இக்கிணறு குறித்து 2014ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கிணறு தோண்ட அனுமதி பெறவில்லை என்றும், அதனை அனுமதி இன்றி செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் அந்த கிணற்றை திறப்பதற்கான நடவடிக்கையை ONGC மேற்கொண்ட போது மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் அக்கிணற்றுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கிணறு தோண்டப்பட்டால் பேராபத்து ஏற்படும் என்பதை எடுத்துரைக்கப்பட்டது. இதனை ONGC நிர்வாகம் ஏற்றுக்கொண்டு நிரந்தரமாக மூடுவதற்கு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த நிலையில் திடீரென 29.07.2022 மாலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ வழிகாட்டுதலோடு பெரியகுடி கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தற்போது தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக உள்ளது இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு 2016க்கு முன் அனுமதி பெற்ற கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவன பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கச்சா எடுக்கும் கிணறுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஓஎன்ஜிசி நிர்வாகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் எனவே அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. மாலை 4.30 மணியளவில் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நிலத்தின் உரிமையாளர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 8 நபர்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து இப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது அப்படி என்றால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மீண்டும் ONGCக்கு அனுமதி கொடுத்துள்ளதா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தனது கொள்கை நிலையை அறிவிக்க முன்வர வேண்டும். ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் பணிகளை மேற்கொள்ளவோ அல்லது பேராபத்து ஏற்படும் என்கிற காரணத்தால் மூடப்பட்டுள்ள எரிவாயு கிணறுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோ அனுமதிக்க கூடாது என மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மன்னார்குடி வட்டாட்சியர் நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசியால் கடந்த காலங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே மீண்டும் கூட்டம் நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் மன்னார்குடி வட்டாட்சியர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்