மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.




இதனிடையே கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயிகள் குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும், விவசாய குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் கூறி 50க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டு கோஷங்களை எழுப்பினர். 




பின்னர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் அலுவலக கூட்ட அரங்கில் சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் வேளாண் அதிகாரிகளிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தில் அதிகாரிகள் முன்பே தரையில் அமர்ந்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.




இதனையடுத்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியரகம் விரைந்து வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு உடன்படாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட்), தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி ஏராளமானோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குறைந்த அளவிலான விவசாயிகளை கொண்டு குறைதீர் கூட்டம் நடைபெற்றது.




இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தங்களது குறைகளை அதிகாரிகளிடம் கூறுவதற்காக தாங்கள் வரவில்லை என்றும், அவர்களிடம் நாங்கள் பலமுறை கூறி தீராத பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தீரும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்திற்கு வருவதாகவும் ஆனால் விவசாயிகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து விவசாயிகள் குறைத்து கூட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் இது தொடராமல் ஆட்சியர் விவசாயிகளிடம் நேரடியாக தங்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்ய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண