மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்தவர் 38 வயதான குமரவேல். கூலிதொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை சேண்டிருப்பு பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு திரும்பியுள்ளார். குமரவேலின் மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்டோவில் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் குமரவேல் மற்றும் அவரது 3 வயது குழந்தை சாய் சக்தி மற்றும் தம்பி மகன் 16 வயதான நித்திஷ் குமார் ஆகிய மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் மேலே மூவரும் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பேருந்தை முந்தி சென்றபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் குமரவேல் குழந்தைகளுடன் நிலை தடுமாறி மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் மீது மோதி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியதில் குழந்தை சாய் சக்தி, மற்றும் அவரது தந்தை குமரவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் குமரவேலுவின் தம்பி மகனான 16 வயது நிதிஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் நிதிஷ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மூன்று பேரின் உடல்களும் உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பேருந்தினை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்து காரணம் குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனங்களில் செல்லும்போது வேகத்தை காட்டிலும் விவேகத்துடன் கவனமாக செல்ல வேண்டும் என்றும், முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பட்சத்தில் பெரும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம் எனவும், இந்த விபத்தில் கண்மூடித்தனமாக போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு பேருந்தை முந்தி செல்ல முயன்ற ஒருவரால் மயிலாடுதுறையில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இதனால் மக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்