தஞ்சாவூர்: தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா துவக்க விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வரவேற்றார். விழாவில் அஞ்சல் துறையால் முழுமையாக பயன்பெறும் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் கடந்த மாதத்தில் 26,126 சேமிப்பு கணக்குகளும், 8899 பேருக்கு ஆதார் சேவையும், 454 GAG பாலிசிகளும், 4576 IPPB கணக்குகளும், 326 பேருக்கு மிண்ணனு உயிர் வாழ் சான்றிதழும், 5400 பேருக்கு 1,15,00,000/- ரூபாய்க்கு ஆதார் மூலம் பண பரிவர்த்தனையும், ஆயுள் காப்பீட்டில் 2961 பாலிசிதாரர்கள் மூலம் புதிய பாலிசிக்கான பிரிமீயம் தொகை 1,34,55,552 ரூபாயும், 2412 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர். தூய்மை இயக்கம் 3.0 அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
அஞ்சல் துறை வழங்கி வரும் பல்வேறு விதமான சேவைகள் அனைத்து மக்களையும் சென்றடைய அஞ்சல் சமூக வளர்ச்சி விழா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் துறை சேவைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தபால், சேமிப்பு, காப்பீடு ஆகிய மூன்று முக்கியமான சேவைகளும், நாட்டில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தொடா்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறது அஞ்சல் துறை என்றால் மிகையில்லை.
கொரோனாவால் நாடே முடங்கியபோதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளை அவா்களின் வீடுகளுக்கு சென்று நேரிடையாக வழங்கியது அஞ்சல்துறை. அந்த இக்கட்டான சூழலிலும், முதியோா்களுக்கான ஓய்வூதியத்தை மாதாமாதம் வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது.
குன்னூா் பகுதியில், மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்காக, அடா்ந்த காட்டுப்பகுதியில், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே, கிட்டத்தட்ட 30 வருடங்களாக, தினமும் 15 கிலோமீட்டா் நடந்தே சென்று அவா்களுக்கு அஞ்சல் சேவையை வழங்கிய தபால்காரா் சிவன் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து பாராட்டுக்களை பெற்றன.
இப்படி தபால் சேவை ஒருபுறமிருக்க, சேமிப்புக் கணக்கு (எஸ்பி), தொடா் வைப்பு நிதி (ஆா்டி) , மாத வருமான திட்டம் (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி), தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி) போன்ற அஞ்சல் துறையின் பாரம்பரிய சேமிப்புத் திட்டங்களைத் தாண்டி, செல்வ மகள் சேமிப்பு திட்டம் (எஸ்எஸ்ஒய்), தங்கப் பத்திரம் திட்டம் போன்ற புதுப்புது திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்யவும் அஞ்சல்துறை தவறவில்லை.
நியாயமான வட்டி, மக்களின் பணத்துக்கு நூறு சதவீத பாதுகாப்பு. இவையே அஞ்சல்துறையின் சிறப்பம்சங்கள். அவசரத்திற்கு பணம் செலுத்த, பணம் எடுக்க சேமிப்பு கணக்கு, மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடா்ந்து சேமிக்க தொடா் வைப்பு நிதி, மாதா மாதம் வட்டி கிடைக்க மாத வருமான திட்டம், மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாளில் சேமித்து வைத்த பணத்தை பாதுகாக்க, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிா்காலத்தை பாதுகாப்பதற்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம், குறிப்பிட்ட தொகையை, ஐந்து வருடங்களுக்கு நிலையான வைப்பு நிதியாக இட்டு வைக்க தேசிய சேமிப்பு பத்திரம், 15 வருடங்களுக்கு தொடா்ந்து சேமிக்க பொது வருங்கால வைப்பு நிதி, 10 வருடம் 4 மாதங்களில் நாம் முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக கிசான் விகாஸ் பத்திரம் என்று அஞ்சல்துறையின் சேமிப்புத் திட்டங்கள் ஏராளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.