தஞ்சாவூர்: விபத்துக்களை தடுக்கும் வகையில் தஞ்சையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த கருவி அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,884. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 67703. இப்படி விபத்துக்களில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு காரணம் கவனக்குறைவா, அதிவேகமா என்பதை விட இதை எப்படி தடுக்கலாம் என்ற கேள்வி விதையாக புதைக்கப்பட்டு அதிலிருந்து உருவானதுதான் சென்சார் ஆட்டோமேட்டிக் இன்ஜின் ஸ்டாப்டு டெக்னாலஜி.


வாகனத்தை நிறுத்தம் சென்சார் டெக்னாலஜி
 
சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்க முன்கூட்டியே கார் வருவதை அறிந்து வாகனத்தை நிறுத்தும் சென்சார் டெக்னாலஜி ஒரு சில நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலையில் நம் நாட்டிலும் அதனை  அறிமுகப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான மாதிரி வடிவமைப்பை கண்டுபிடித்து மாவட்ட அளவில் அறிவியல் போட்டியில் 3ம் பரிசும் பெற்றுள்ளனர் தஞ்சாவூர் மருத்துக்கல்லூரி சாலையில் இயங்கி வரும் திருமகள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குழுவினர். 




வேர்கள் என்ற ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம். தன்னம்பிக்கை தான் வாழ்க்கையின் உயர்வுக்கு படிக்கட்டுகள். நம்பிக்கை எனும் சாம்ராஜியத்தை உருவாக்கினால் இன்றைய தோல்வி நாளைய  வெற்றியாக மாறும். முடியாத கலைகள் கூட முயற்சி என்ற வேட்டையில் மண்டியிட்டு நிற்கும். அதுபோல் தங்கள் மனதில் விழுந்த வேதனையை போக்க இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதுதான் ACCIDENT DETECTION AND SMART ALERT SYSTEM FOR VEHICLES(விபத்து கண்டறிதல் மற்றும் வாகனங்களுக்கான நவீன அலர்ட் சிஸ்டம்). சாலைகளில் வாகன விபத்து என்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கவனக்குறைவாலும் எதிர்பாராதவிதமாகவும், குடித்துவிட்டு அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் இந்தியாவில் நாளொன்றுக்கு சாலை விபத்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள்  ஏற்பட்டு வருகிறது. அவற்றை தடுக்க சாலை விதிமுறைகளை பின்பற்றினாலே போதும். ஆனால் அவற்றை யாரும் கடைபிடிப்பதில்லை.


தஞ்சை திருமகள் பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு


அரசு அதற்கான பல்வேறு விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் வாகன விபத்துக்கள் குறைந்தபாடில்லை. இதற்கு ஒரு தீர்வாக தஞ்சை திருமகள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் டி.செம்மல், எஸ்.பவித்ரன், ஆர்.முகுந்தன், எஸ். அபினேஷ் ராஜ்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்டுபிடித்ததுதான் விபத்து கண்டறிதல் மற்றும் வாகனங்களுக்கான நவீன அலர்ட் சிஸ்டம்.


இந்த கருவி பஸ், கார் போன்ற வாகனங்களின் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு பக்கமும் பொறுத்தப்படுகிறது. இதில் சென்சார், ரிலே மற்றும் இன்ஜின் கண்ட்ரோல்டு கருவி ஆகியவை உள்ளது. வேகமாக செல்லும் வாகனம் முன்புறத்தில் மோத வரும் வாகனங்களை 10 மீட்டர், 20 மீட்டர், 50 மீட்டர் என்ற தூர அளவிற்கு சென்சார் செய்து ரிலே கருவி வாயிலாக இன்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ள கண்ட்ரோல்டு கருவிக்கு அனுப்புகிறது. இதனால் அந்த கருவி உடனடியாக இயங்கி வாகனத்தை நிறுத்தி விடுகிறது. இந்த சென்சார் இயங்கும் போது அலார்ட் செய்யும் வாகனத்தை இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இந்த கண்டுபிடிப்பு மாவட்ட அளவில் 3ம் பரிசை பெற்றுள்ளது.




மாணவர்கள் குழுவினர் இணைந்து கண்டுபிடித்தனர்


மாணவர்கள் டி.செம்மல் தந்தை தட்சிணாமூர்த்தி, தாய் சுஜாதா,  எஸ்.பவித்ரன் தந்தை சுரேஷ், தாய் சூர்யகலா, ஆர்.முகுந்தன் தந்தை ரமேஷ், தாய் லோகநாயகி, எஸ். அபினேஷ் ராஜ்யா தந்தை சூசைராஜ், தேவிசங்கரி என சாதாரண குடும்ப பின்னணியை சேர்ந்த இம்மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இந்த கருவியை கண்டுபிடித்துள்ளோம். இது  மாதிரிதான். இதுபோன்ற கருவியை பஸ், கார், வேன் ஆகியவற்றில் பொறுத்த சில ஆயிரங்கள் மட்டுமே ஆகும். பல லட்சக்கணக்கில் வாங்கிய வாகனத்தில் குறைந்த அளவில் இந்த கருவியை பொறுத்தவதால் வாகன விபத்துக்கள் தடுக்கப்படும்.


சென்சார், பேட்டரி, ரிலே கருவியை அமைக்கணும்


இருபுறமும் பொருத்தப்படும் சென்சார் மற்றும் பேட்டரியுடன் இணைந்த ரிலே கருவி, வாகனத்தை நிறுத்தச் செய்யும் கண்ட்ரோல்டு கருவி ஆகியவை பல்வேறு விபத்துக்களை தடுக்கும். சென்சாரில் இருந்து செல்லும் தகவல் ரிலே வழியாக இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள கண்ட்ரோல்டு சிஸ்டம் வாயிலாக வாகனத்தின் முழு இயக்கத்தையும் உடனடியாக தடுத்து விடும். மேலும் அலார்ட் செய்யும் விதமாக அலாரமும் ஒலிக்கும். இது மக்களின் உயிரை காக்கும். இந்த கருவியை கண்டுபிடிக்க எங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, அறிவியல் ஆசிரியை கமலா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்றனர்.


மாணவர்களின் கண்டுபிடிப்பு குறித்து தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் அறிவியல் ஆசிரியை கமலா ஆகியோர் கூறுகையில், இந்த கருவியை வாகனங்களில் பொறுத்தும் போது வாகனத்தின் இயக்கம் முழுவதும் நிறுத்தம் செய்யப்படுகிறது. உயிரிழப்பு என்பது தடுக்கப்படுகிறது. மாணவர்களின் இந்த உயரிய எண்ணத்தில் உருவான இக்கருவியை இன்னும் மேம்படுத்த அரசு உதவிகள் செய்ய வேண்டும் என்றனர்.