மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆன ஓ.எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். தலைச்சங்காடு, தர்மகுளம், நெப்பத்தூர், மணிகிராமம், திருவாலி, வேட்டங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகள் குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். 




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ். மணியன், "பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையில் இளம் சம்பா நாற்றுகள் அனைத்தும் அழிந்து விட்டது. ஏற்கனவே பெய்த மழையில் பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் இருந்த தடம் தெரியாமல் இருக்கிறது, இதற்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் வேலை இன்றி தவித்து வரும் நிலையில், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகா பகுதிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது ஏற்புடையது அல்ல, மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். 




பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு காலக்கெடுவை நீட்டிப்பதுடன் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தபடி இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும். இயற்கை பேரிடர் என்று சொல்லும் வகையில் குறுகிய நேரத்தில் பெய்த கனமழை கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களுக்கு பத்திரமாக அழைத்துவந்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு, அதனை உரிய முறையில் செய்யாததால் மக்கள் அனைவரும் தற்போது அவதியுற்று வருகின்றனர்.  கஜா புயலின் போது மரணம் என்ற நிகழ்வே இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 




பருவகால மழை கடுமையாக இருக்கும், சராசரி மழையை விட அதிகமான மழை இருக்கும், எங்கெங்கே எவ்வளவு மழை அதிகம் இருக்கும் என முன்னெச்சரிக்கையாக கூறியுள்ளனர். இருந்தும் அதிகாரிகள் கடைமடை பாதிப்பு பகுதி வரை சென்று பாதிப்புகளை பார்க்காமல் மேடான பகுதியில் முக்கிய சாலையில் சென்று பார்ப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. ஐந்தாம் நாளாக வெள்ளம் வடியாமல் இருக்க காரணம், வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு அதிகாரிகள் அரசிடம் நிதி கேட்டும் நிதி கொடுப்பதற்கு முன்வராததே.




தமிழக முதல்வர் பாதிப்பு அதிகம் உள்ள குக்கிராம் வரை சென்று பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளை பார்த்திருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறிருக்கமாட்டார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் அவர் வந்திருக்கவே வேண்டியது இல்லை, மக்கள் அவதியுற்று இருக்கிறார்கள் என்பதால் தான் அவர் வந்தார். அவ்வாறு வந்தவர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியது வெந்த புண்ணில் வேல்லை பாய்ச்சுவது போல உள்ளது. அவர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து இருப்பார், நாட்டு மக்கள் மகிழ்ச்சி இருப்பதாக கூறியதாக தெரியவில்லை” என விமர்சித்தார்.


மேலும், “ஐந்து தினங்களாக மின்சாரம் இன்றி இருளில் மக்கள் தவித்து வருவது இவர்கள் எடுத்தும் வரும் வெள்ள நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்” என்று கூறினார். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த புதைவட மின்கம்பி திட்டம் தோல்வியானது என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்துக்கு, நிலத்துக்கு அடியில் மின்விநியோகம் செய்யும் திட்டம் நிதி செலவு அதிகம் ஆகையால், தற்போது உள்ள அரசு சம்பளம், பென்ஷன், இரண்டு ஆண்டுகளாக வேலை செய்த காண்ட்ராக்ட் காரர்களுக்கு பில் வழங்கதது, பஞ்சாயத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளனர். ஆகையால், பூமிக்கு அடியில் மின்கம்பி புதைப்பது என்பது கனவில்தான் இவர்கள் காணவேண்டும் என்றார்.