திருவாரூர் மாவட்டம் மலவராயநல்லூர் ஊராட்சியில் உள்ள தட்டாங்கோவில் கிராமத்தில்  இயங்கி வரும் பெட்டிக்கடை ஒன்றில் அரசு மதுபானங்கள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன. டாஸ்மாக்கில் 135 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர், இங்கு 200 ரூபாய்க்கும் கட்டிங் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என புகார் எழுந்துள்ளது.


இந்தப் பெட்டிக்கடையினை தம்பதி ஒருவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த மது விற்பனையால் அந்த ஊராட்சி மட்டுமல்லாது அருகிலுள்ள திரு ராமேஸ்வரம், தென்கோவனூர் போன்ற ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் பெண்களும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இங்கு விடியற்காலையில் வரும் மதுப் பிரியர்கள் மது குடித்துவிட்டு அங்கேயே சாலையில் விழுந்து கிடப்பதால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் முகம் சுழிக்கின்ற அவல நிலை உள்ளது.


மேலும் காலை நேரத்தில் அங்கு மது அருந்தும் மதுப் பிரியர்களால்  பெண்கள் மற்றும் மாணவிகள் அந்த சாலையை கடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பெட்டி கடையில் நடக்கும் மது விற்பனை காரணமாக திருராமேஸ்வரம், கோட்டகச்சேரி, கூப்பாச்சி கோட்டை, வாக்கோட்டை, தென்கோவனூர், வடகோவனூர் உள்ளிட்ட பல கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து, தென்கோவனூர்,  திருராமேஸ்வரம் ஆகிய இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபை கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி கோட்டூர் காவல் ஆய்வாளருக்கு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி புகார் மனுவையும் அளித்துள்ளனர்.




இருப்பினும் இதுவரை காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்பகுதி இளைஞர் ஒருவர் இந்த கடையில் நடக்கும் மதுபான விற்பனை குறித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


தமிழக முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மகளிர் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி பல்வேறு இடங்களில் அரசு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவது மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை பகுதிகளில் அரசு மதுபான கடை செயல்படக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகளவில் கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.




நண்பகல் 12 மணிக்கு மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் பல இடங்களில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்பனை திருவாரூர் மாவட்டத்தில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக மது அருந்திவிட்டு சாலையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.