திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் பாரதிதாசன் நகர் ஆறாம் நம்பர் வாய்க்கால் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாலை மன்னார்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்களை கடத்தி வந்த திருமகோட்டை அடுத்த மேலநத்தம் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, சரவணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரித்ததில் இருவரும் சேர்ந்து பாண்டிச்சேரியிலிருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து அதனில் ரசாயன பவுடர் கலந்து போலியாக மது பானம் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 



 

இதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவின்பேரில் சரவணன் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி என்பவரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்ததன் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார் இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் நகலை மன்னார்குடி ஆய்வாளர் விசுவநாதன் நாகை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி என்பவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.



 

இதேபோன்று பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய தென்கோவனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ராஜ்குமார் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.