முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை காண வந்த 3 வாலிபர்கள் அதிகாலை 3 மணியளவில் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது அவ்வழியாக சென்ற தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். ஒரு வாலிபர் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தேறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன் வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 14ந் தேதி துவங்கியது. முக்கிய நாளான 10ம் நாள் நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் விடிவிடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துத் கொண்டனர்.

 

இந்தநிலையில் திருவிழாவை காணவந்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண் (17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத் (17), நாகை மாவட்டம், தாணிக்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த முருகபாண்டியன்(24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டதால் சோர்வு ஏற்பட்டதுடன் அருகில் இந்த ரயில்வே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது அதிகாலை சுமார் 3 மணியளவில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் அருண் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்கப்பட்டு ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கோவில் திருவிழாவின்போது நடந்த இந்த துயர சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

தாம்பரம் செங்கோட்டை ரயிலானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் முத்துப்பேட்டை பகுதியில் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில் முதல் ரயில் இந்த ரயிலாகும். இந்த நிலையில் ரயில்வே காவல்துறையினர் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். குறிப்பாக தண்டவாளத்தில் யாரும் படுக்கக் கூடாது மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என பல முக்கிய விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இதே போன்ற சம்பவங்கள் நடந்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். தற்பொழுது இருவரது உடலையும் கைப்பற்றி பிரதி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த நபர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவினில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது