திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான பாண்டி, சிங்களாந்தி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தேவையை கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் பூர்த்தி செய்து வருகிறது. பொதுவாக இந்த பகுதிகளில் ஆழ்துளை மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீர் உப்பு தன்மையுடன் இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீரையே நம்பி இருக்கின்றனர். பல நாட்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் சில கிராமங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே நாள் ஒன்றுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் கூட்டு நீர் குடிநீர் திட்டத்தையே தங்களது குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள பல கிராம மக்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.இந்த குடிநீரானது கொள்ளிடம் கூட்டு குடிநீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் சேமித்து வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 

இந்த நிலையில் வீட்டுக்கு வீடு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செலவு அதிகரித்துள்ளதால் பற்றாக்குறையும் ஒரு சேர அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரிவர சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தினால் நீர் மாசுபட்டு அதன் மூலம் பொது மக்களுக்கு காலரா போன்ற பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வரம்பியம் ஊராட்சியில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வரம்பியம் ஊராட்சியில் நடுத்தெரு, வடக்குத்தெரு, தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . 



 

இந்த நிலையில் நடுத்தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக மஞ்சள் நிறத்தில் வருகிறது இதனைக் கண்டு, பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே இப்பகுதி சிறுவர்களுக்கு அவ்வப்போது காய்ச்சல் ஏற்பட்டு வருவதற்கும் குடிநீரின் நிறம் மாறி இருப்பதே காரணம் எனவும் அச்சம். தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், வீடுகள் குழாய்கள் அமைக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டதிலிருந்து இந்த நிலை இருப்பதாகவும் உடனடியாக அதிகாரிகள் குடிநீரின் தன்மை குறித்து நேரில் ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும் என வரம்பியம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் காரல்மார்க்ஸிடம் கேட்ட போது சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளேன் மேலும் குடிநீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண