பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வதோச பரிகாரத்தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோயில் விளங்கி வருகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஐந்து வேலி பரப்பளவைக் கொண்டது. அதேபோல திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளமும் ஐந்து வேலி பரப்பளவை கொண்டது. பிரசித்தி பெற்ற இந்த கமலாலய குளக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். மறைந்த தங்களது முன்னோர்களுக்ககு வருடாந்திர திதி கொடுக்க தவறியவர்கள் ஆடி அமாவாசை அன்று கமலாலய குளத்தில் நீராடி தர்ப்பணம் செய்தால் பித்ரு சாபம் நீங்கி புண்ணியம் கிடக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர்  புரோகிதர்களுக்கு பச்சரிசி காய்கறிகள் கீரை ஆகியவற்றை தானமாக வழங்கி எள் பச்சரிசியில் பிண்டம் பிடித்து குப்த கங்கையில் தர்ப்பணம் விட்டு முன்னோர்களை வணங்கினர்.




இங்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமானோர் வருகை தந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். தர்ப்பணம் கொடுத்தவர்கள் அருகில் உள்ள தியாகராஜர் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு தர்ப்பணம் செய்யும்போது பயன்படுத்தப்படும் அரிசியை வீட்டிற்கு எடுத்துச் சென்று அன்று தாங்கள் சமைக்கின்ற உணவில் சேர்த்து தங்களது விரத்தை முடிப்பர். இதேபோன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி, தனது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடி குளத்தில் நீராடி வருகின்றனர்.




இந்த திருத்தலம் பித்ருதோஷ நிவர்த்தி ஸ்தலமாகும்.இக்கோயிலில் ராமர் தனது தந்தைக்கு பித்ரு தோஷ நிவர்த்தி செய்தார் என்பதும், போரின் போது அசுரர்களை கொன்றதால், பிரம்ம ஹத்தி தோஷம் நீங்க இங்கு சிவனை வழிபட்டார் எனவும், புராண வரலாறுகள் கூறுகின்றன.இந்த திருத்தலத்தில் கோதண்ட தீர்த்தம் என்று அழைக்கப்படும் திருகுளத்தை   தனது பூஜைக்கு தண்ணீர் பெற, ராமர் தனது வில்லால் தரையைப் பிளந்து ஊற்றுநீராக வரவழைத்து உருவாக்கினார் என்பதால், இந்த குளத்தில் நீராடி சிவபெருமானை வழிபடுவதும், முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் சிறப்பாக கருதப்படுகிறது. இத்தகைய திருத்தளத்தில் ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி தனது முன்னோர்களுக்கு திதி கொடுத்து சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர். ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண