தமிழக ரேஷன் கடைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவு 7  சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் கார்டுகளுக்கு விநியோகிக்கப்படும் மண்ணெண்ணையின் அளவு அரை லிட்டரில் இருந்து 1/4 லிட்டராக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

 

நாடு முழுவதும் கேஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏழை மக்களுக்கும் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டங்கள் மத்திய மாநில அரசுகளால் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு படிப்படியாக அதன் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில் ரேஷன் கடைகளில்  விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணையின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு வரை மொத்த மண்ணெண்ணெய் தேவையில் தமிழகத்துக்கு 11 சதவீத மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டது அது இந்த மாதத்தில் இருந்து ஏழு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கைகள் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி ஏழு சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளதால் தற்சமயம் தகுதி உள்ள ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் - யானது 1/4 லிட்டர் என்ற அளவாக குறைக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஏற்கனவே மண்ணெண்ணெய் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதால் இந்த விவரத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண