கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் தலையில் தாள் பைகளை அணிந்து கொண்டு நாத்து நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர். தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 99 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர்.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்து ஆறு நாட்களாக கன மழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாளடி நெற்பயிர் தெளித்து 20 நாட்களே ஆன பயிர்கள் வயலில் மழைநீர் தேங்கி உள்ளதால் அழுகி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்து வரும் நிலையில் விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மலையை பொருட்படுத்தாமல் விவசாய பணிகள் பாதிக்காத வகையில் விவசாய பெண் தொழிலாளர்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் பகுதியில் சம்பா பயிரிடப்பட்ட வயில்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் தலையில் தாள் பைகளை அணிந்து கொண்டு நாத்து நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து இந்த மழை பெய்தால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் பாதிக்கக்கூடும் என்ற வேதனையுடன் பெண் விவசாய தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக ஆய்வு செய்து ஜேசிபி பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக மழை நீரை வடிய வைத்தால் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளை முழுமையாக வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என பெண் விவசாய தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.