6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும். தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பேட்டி. 


தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்களின் 15-வது  மாநில பேரவை திருவாரூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பேரவையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வு செய்திடல் வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பேரவை கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த ஆண்டு சுமார் 14.50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 10, 292 கோடி கூட்டுறவு கடன் வழங்கி சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது இதுவரை ரூ 6372 கோடி பயிர் கடன் 8 லட்சத்து 48 ஆயிரத்து 76 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதுதவிர  விவசாயிகள் மாற்றுத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் விவசாயம் சார்ந்த தொழிலான கால்நடை வளர்ப்புக்கு வட்டி இல்லா கடனாக ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 52 விவசாயிகளுக்கு ரூ 770.86 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கோழி வளர்ப்பு மீன் வளர்ப்புக்கும் கடன் வழங்கப்படுகிறது.




அதேபோன்று கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் கணவனை இழந்த பெண்களுக்கு 5 சதவீத குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் பணியை கூட்டுறவுத்துறை கடந்த நான்காண்டுகளாக செய்து வருகிறது என்றார்.


தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பதிவாளர், “தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில், 33,400 ரேஷன் கடைகள் கூட்டுறவுத் துறை மூலம் இயங்குகின்றன இவற்றில் 23 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் தற்போது விற்பனையாளர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்கள் 6503 உள்ளன. இதற்கான தேர்வுக்கு இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளது.


ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடைபெறுவதால் நியாயமான முறையில் பணி நியமனம் நடைபெறும். வரும் நவம்பர் 14ம் தேதி வரை மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் 15ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஜனவரி முதல் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்” என்றார்.




மேலும், அமுதம் அங்காடிகளில் பணியாற்றுபவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை பதிவாளர், ”அமுதம் அங்காடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் டிகிரி முடித்தவர்கள். கூட்டுறவு துறையில் 12 ம் வகுப்பு உள்ளிட்ட பள்ளி வகுப்பு முடித்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே அமுதம் அங்காடி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது இயலாது. இது ஊழியர்களுக்கும் புரியும்” என்றார்.