டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் கொட்டும் மழையில் குடையை பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. மேலும் ஷேல் கேஸ், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவைகளை ஓஎன்ஜிசி நிறுவனம் எடுத்து வந்தது. இந்த நிலையில் விவசாயிகள் தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் விவசாய நிலத்தில் குழாய் பதிக்க கூடாது எனக்கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இந்த நிலையில் மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் விவசாயிகள் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது மேலும் டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளியேற வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த நிலையில் இன்று சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில்  ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்த அனுமதிக்க கூடாது மேலும் ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட கிணறுகளை திறக்கவும் புதிய கிணறுகளை அமைக்கவும் அனுமதி அளிக்கக்கூடாது மேலும் ஓஎன்ஜிசி முன்பு மூடப்பட்ட 40 கிணறுகளை மீண்டும் செயல்படுத்த சட்டத்திற்கு புறம்பாக முயற்சிக்கிறது. இதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கொட்டும் மழையில் குடையை பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஎம் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு தொழிற்சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி பேரணியில் ஈடுபட்ட நிலையில் இன்று சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளியேற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.




ஒரே கட்சியில் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால் சிபிஎம் கட்சியின் தலைமை ஓஎன்ஜிசி விவகாரத்தில் தங்களின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அனைத்து விவசாயிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாய சங்கங்களில் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் பேசுகையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் விவசாய நிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிவாயுகளை எடுத்து வருகிறது. இதனால் அதிக அளவில் விவசாய நிலங்களில் விபத்து ஏற்பட்டு விளைநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. ஆகையால் டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதை அனுமதி அளிக்கக்கூடாது. மேலும் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கக்கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்த பிறகும் ஓஎன்ஜிசி நிர்வாகம் பணிகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கக் கூடாது. இல்லையென்றால் டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் ஓஎன்ஜிசியால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்