மருத்துவத்துறையில் உள்ள 4308 காலி பணியிடங்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நிரப்பப்படும் என்று திருவாரூரில் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 


திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியே 67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கான சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, உணர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு, ஆதிச்சபுரம் கிராமத்தில் துணை செவிலியர்கள் மற்றும் செவிலியர் குடியிருப்பு, செருமங்கலம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம், வெங்கத்தான்குடி கிராமத்தில் துணை சுகாதார நிலையம், உபயவேதாந்தபுரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார புறநோயாளிகள் பிரிவு ஆகிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது, “அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம். அந்த வகையில் ஏற்கனவே 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனங்கள் செய்யப்பட்ட பொழுது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடந்த நேர்காணலில் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு 20 சிறப்பு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார்கள். 




பணியமர்த்தப்பட்ட 7,448 நபர்களில் 50 சதவீதம் நபர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பணியிடங்கள் நிரப்பப்படும் பொழுது கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றியவர்களை நிரந்தரப்படுத்த முடியாது. தமிழகத்தில் மருத்துவத் துறையில் 1021 மருத்துவர்கள் உட்பட மொத்தம் உள்ள 4308 காலியிடங்களின் பட்டியல் மருத்துவ தேர்வாணயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சென்ற நிதிநிலை அறிக்கையிலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது 237 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் இறுதிக்குள் அல்லது நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த 4308 பணியிடங்களும் எந்த மருத்துவமனைகளில் காலியிடங்கள் இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல் நிரப்பப்படும். 




தமிழகத்தில் குடும்பத் தலைவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது, குறிப்பாக இளம் பெண்கள் பயன்படுத்துவது சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் சாணி பவுடரை விற்பனைக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் சாணி பவுடரை நாம் தடை செய்தாலும் வெளி மாநிலங்களில் அது உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அவர்களுக்கும் இதன் தீமைகள் குறித்து எடுத்துக் கூறி உற்பத்தியை தடை செய்ய வேண்டும். இது அகில இந்திய அளவிலான பிரச்னையாக இருப்பதால் இதுகுறித்து ஒன்றிய அரசு உடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். சாணி பவுடர் என்பது எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகவும் இருக்கிறது. அதேபோன்று எலி பேஸ்ட் விற்பனையை கடைகளில் விளம்பரப்படுத்தும் வகையில் வைக்கக் கூடாது. மறைத்து வைத்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறோம். மேலும் எலி பேஸ்டை தனியாக வந்து வாங்குவோர்களுக்கு கொடுக்கக் கூடாது தங்களுடன் ஒரு ஆளை அழைத்து வருபவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறோம் என்று  கூறினார்.