கபடி போட்டியில் சாதிக்கத் துடிக்கும் கட்டகுடி வீராங்கனைகள் முறையான விளையாட்டு மைதானம் வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி என்ற குக் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய அனைவரும் விவசாய கூலி தொழிலாளிகள். குறிப்பாக இந்த கட்டகுடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியராக உதயகுமார் என்பவர் பணிக்கு சேர்ந்த நிலையில் அன்று முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு  கபடி பயிற்சி அளித்து வருகிறார். மேலும் அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடியவர்கள். கடந்த 10 வருடங்களாக மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வரும் உதயகுமார் கூறுகையில், “கடந்த காலங்களில் கபடி போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் செல்லும் பொழுது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அனைவரும் பண  உதவி செய்ததன் பேரில் பல்வேறு இடங்களுக்கு போட்டிக்கு சென்று வந்தோம். தற்போது சிங்கப்பூரில் தொழில் அதிபராக இருந்து வரும் சுரேஷ்குமார் என்பவர் அனைத்து விதமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி  ஸ்பான்சர் செய்து வருவதால் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு கோப்பைகளை வென்று வந்துள்ளோம். அது மட்டும் இல்லாமல் இந்த பள்ளியில் பயின்று தற்போது வெளியூரில் கல்வி பயிலும் மாணவிகள் தினம் தோறும் காலை மற்றும் மாலை வேளையில் வந்து இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.



 

அதுமட்டுமில்லாமல் இங்கு பயிற்சி பெற்று வரும் மாணவிகள் இதுவரை 16 முறை தேசிய அளவிலான கபடி தேர்விலும் அதேபோல் மூன்று முறை பல்கலைக்கழக அளவிலான கபடி தேர்விலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களுக்கு நிரந்தரமான ஒரு விளையாட்டு மைதானம் இல்லை எனவே எங்களுக்கு நிரந்தரமான ஒரு விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இந்த குக்கிரமத்தில் இருந்து கபடி விளையாடக்கூடிய நாங்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறோம். நாங்கள் நாட்டுக்காக விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற வேண்டும்  என்பது எங்களது கனவாக உள்ளது” என்று தெரிவித்தார்.



 

அது மட்டும் இல்லாமல் நாங்கள் அரசு வேலைக்கு சென்று விட்டால் எங்களை பின்தொடர்ந்து வரும் மாணவிகளும் இதுபோன்று கபடி விளையாட்டில் சாதித்து பல்வேறு துறைகளில் பணி புரிவதற்கு ஒரு முன் உதாரணமாக நாங்கள் இருக்க வேண்டும் எனவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர். மேலும் விளையாட்டு வீராங்கனைகளின் முக்கியமான கோரிக்கையாக இருப்பது என்னவென்றால் நிரந்தரமான ஒரு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு கட்டகுடி பகுதியில் நிரந்தரமான விளையாட்டு மைதானம் அமைத்து  தந்தால் கபடி விளையாட்டில் மாணவிகள் சாதிப்பார்கள். குறிப்பாக இந்த கட்டக்குடி பகுதியைச் சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற மகளிர் கபடி போட்டியில் தென்னிந்திய அளவிலான  போட்டியில் முதலிடமும் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடமும் அதே போல் ஜெயங்கொண்டம், அரியலூர், சிவகங்கை, திருநெல்வேலி நன்னிலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் முதலிடம் பிடித்தும் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.