திருவாரூர் மாவட்டம் நான்கு நகராட்சி, ஏழு பேரூராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 534 ஊராட்சிகள் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டது. மேலும் மாவட்டம் முழுவதும் 10,000 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்றளவும் பல்வேறு கிராமங்களில் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் விவசாய நிலத்தில் இறங்கியும் ஆற்றில் இறங்கியும் சடலத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை இன்றளவும் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பல கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பு மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோட்டூர் அருகே மேலப்பனையூர் தெற்கு தெரு கிராமத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் கொட்டும் மழையில் விவசாய நிலத்தில் இறங்கி தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.




திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்கள் அனைவருமே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது. இந்த மூன்று வாய்க்காலிலும்  பாலம் இல்லை வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை  சேறு- சகதியும் நிறைந்த வயல் வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்கின்றனர்.


மேலப்பனையூர் தெற்கு தெரு சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் வாட்டார் தார்சாலையிலிருந்து சுடுகாடு வரை உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து  தார் சாலையாக சீரமைக்க வேண்டும் என்றும், சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர். மழை வெள்ளம் காலங்களில் எங்க ஊரில் இறந்தவர்கள் உடலை தகனம் செய்வதற்கு அவதிப்பட்டு வருகிறோம் ஆகவே  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு  கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.




இதேபோன்று நன்னிலம் அருகே பாடசாலை கிராமத்தில் 6க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டிற்கு தனியாக சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஆற்றை கடந்து தான் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. கோடைகாலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரங்களில் இவர்கள் ஆற்றில் இறங்கி சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் தற்பொழுது ஆறு முழுவதும் தண்ணீர் செல்வதால் ஆற்றில் இறங்கிதான் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் சடலத்தை தூக்கி செல்லும் நபர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் மாவட்டம் முழுவதும் இதேபோன்று சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாமல் இருக்கக்கூடிய கிராமங்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.