திருத்துறைப்பூண்டியில் மரைக்ககா கோரையாற்றில் மண்டிகிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 


திருவாரூர் மாவட்டத்தில் 53 ஆறுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் 10,000 மேற்பட்ட சிறுகுறி வாய்க்கால்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் மூன்று போகும் நெல் சாகுபடி மற்றும் பருத்தி கடலை வாழை உள்ளிட்ட சாகுபடி பணிகளில் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஆறு மற்றும் சிறுகுறி வாய்க்கால்களை தூர் வாருவதற்கு ஆண்டுதோறும் சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது செய்து வருகிறது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரதான ஆறுகள் மற்றும் கிராமப்புறங்களில் செல்லக்கூடிய சிறு குறு வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாரப்படாததன் காரணத்தினால் மழைக்காலங்களில் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க கூடிய நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்துறைப்பூண்டி நகர எல்லை மடப்புரத்தில் துவங்கும் மரைக்கா கோரையாறு தொண்டியக்காடு கடற்கரை பகுதியில் முடிவடைகிறது. 20 கிலோமீட்டர் நீளமுடைய வடிகால் நகர் ஊராட்சி ஓவர்குடி,  மருதவனம், ஆட்டூர், பண்டாரவடை, நுணாக்காடு இளநகர், மாங்குடி, நெடும்பலம்,  கள்ளிக்குடி,  கருவேப்பஞ்சேரி, வேப்பஞ்சேரி பாண்டி, குன்னலூர், எக்கல், கடம்ப விளாகம், கீழப்பெருமழை, மேலப்பெருமழை ஆகிய கிராமங்களுக்கான சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கான பாசன நீர் மழை நீர்  அதிகளவு வடிகால்கள் வழியாக கோரையாற்றில் வந்து சேர்கிறது  




20 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த வடிகாலில் பெரும்பாலான பகுதி ஆகாயத்தாமரை தண்ணீர் ஆற்றில்  ஓடுவது தெரியாத அளவுக்கு இரு கரைகளையும் இணைத்து காடு போல மண்டி கிடக்கிறது. இதனை அகற்றுவது என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்போதும் அதிக மழை பெய்யும் பொழுதும் வடிகாலில் இருந்து வரும் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. அதிக அளவு மழை வந்தால் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாய நிலத்துக்கு தண்ணீர் தேங்கி விவசாயம்  பாதிக்கப்படும் பல இடங்களில் இந்த ஆற்றின் கரைகள்  பலவீனமாக உள்ளதால் வெள்ள காலங்களில் அதிக மழை காலங்களில் கரை உடை உடைப்பு ஏற்பட்டு  குடியிருப்பு பகுதியில் வெள்ளம்  சூழும்  அபாயம் உள்ளது.  எனவே அரசும் பொதுப்பணித்துறையும் உடனடியாக இந்த ஆகாய தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி இந்த வடிகாலை சீரமைக்க வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓவர்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வடிகால் தண்ணீரை  குளிப்பதற்கும் புழங்குவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர் தாவரங்கள் காடாக மண்டி கிடப்பதால் இந்த தண்ணீர் மாசடைந்து இதில் குளிக்கும் மக்களுக்கு தோல் நோய்கள்  கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளதால் தொற்று நோய்களும் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.




இதுகுறித்து ஓவர்குடி கிராம மகளிர் குழுவைச் சேர்ந்த  மேகலா ரேணுகா ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். கோரிக்கை வலியுறுத்தி ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் தலைவர் சேகர், முத்துப்பேட்டை மார்க்சிஸ்ட் கம்யூ ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் இகம்யூ கிளைச் செயலாளர் முருகையன் ஆகியோர் கூறியதாவது, அதிகளவில் வடிகால் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவது கரைகளை பலப்படுத்துவது நீண்ட நாள்  கோரிக்கையாக உள்ளது.  இதனை வலியுறுத்தி இப்பகுதி கிராமங்களை ஒன்றிணைத்து நூதன போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.