திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓடம்போக்கி ஆறு இருக்கிறது. மடப்புரம் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே இந்த ஒற்றை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருவாரூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட வெளியூருக்கு சென்று வருபவர்கள் மடப்புரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த ஒற்றை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பாலம் மூலம் இரு சக்கர வாகனம் உட்பட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த பாலம் இருந்து வருகிறது.



 

திருவாரூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒற்றை பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக கும்பகோணம் சாலைக்கு செல்வதற்கு இந்த பகுதியை கடந்து சென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சென்று விடலாம். அதே நேரத்தில் தற்போது பாலம் வசதி இல்லாத காரணத்தினால் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஒற்றை பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆகையால் தினமும் உயிருக்கு ஆபத்தான பயணத்தை மாணவர்களும் பொதுமக்களும் மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மரண பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பாலம் மரண பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது.



 

குறிப்பாக இந்த ரயில்வே மேம்பாலமாக இருந்து வருவதால் இந்த பாலத்தை கடந்து தான் தினமும் திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் வேலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 100 அடி தூரத்தில் செங்குத்தாக உள்ள இந்த பாலத்தில் பொது மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பல ஆண்டுகளாக இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை இதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என காரணம் கூறுகிறார்களே தவிர புதிய பாலம் கட்டுவதற்கான பணி இதுவரை தொடங்காமல் இருப்பதால் தினமும் அச்சத்துடன் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். உடனடியாக திருவாரூர் நகர்ப்பகுதிகளில் உள்ள இந்த இரண்டு முக்கியமான பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.