முத்துப்பேட்டை பேருந்து நிழற்கட்டிடத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்கிரமித்து தங்கி இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.


 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மார்க்கத்திற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது. இங்குதான் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் உட்பட மதுரை, திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற பகுதிக்கு பேருந்துகளில் செல்லவும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் இந்த பேருந்து நிறுத்தம் எந்தநேரமும் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம். இந்தநிலையில் இந்த பேருந்து நிழற்கூடத்தில் அபகுதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் மூட்டை முடிச்சுக்களுடன் நீண்ட நாட்களாக தங்கி இருந்து வருவதால் இங்கு வரும் பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. 

 

இதில் பயணிகள் நிழற்கூடத்தில்  இங்கு தங்கியுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு வரும் பயணிகளை திட்டுவதும் சில நேரத்தில் அடிக்க துரத்துவதுமாக உள்ளதால் பயணிகள் அங்கிருந்து அலறடிதுக்கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பெண் பயணிகள், குழந்தைகள், முதியோர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல் இந்த கட்டிடத்திற்குள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டை முடிச்சுகள் நீண்ட நாட்களாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் பலவித தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளது. இதுமட்டுமின்றி அங்கு வரும் பயணிகள் இந்த துர்நாற்றத்தால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. தற்பொழுது கடும் சுட்டரிக்கும் வெய்யில் அடித்து வருவதால் பயணிகள் வேறு வழியின்றி இந்த நிழற் கட்டிடத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 இதுகுறித்து இங்கு வரும் பயணிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் அப்பகுதி வியாபாரிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்த்து இந்த பேருந்து நிழற்கட்டிடத்தை முறைப்படுத்தி பயணிகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாத வகையில் செயல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் எந்த பலனுமில்லை. தற்பொழுது வெயில் கடுமையாக இருப்பதால் இனியும் அலைச்சியம் காட்டாமல் பேரூராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து இங்குள்ள மனநலம் 

பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வேறு இடத்திற்கோ அல்லது காப்பகத்திற்கோ மாற்றி இந்த கட்டிடத்தை சுத்தம் செய்து பயணிகள் வசதிக்கு தயார்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.