திருவாரூரில் நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஜப்பானிய வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார்.
திருவாரூரில் நிருபர்களிடம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் கூறியதாவது, "திருவாரூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமி ஒருவருக்கு ஜப்பானீஸ் என்கலிப்டஸ் என்ற காய்ச்சல் பாதித்துள்ளது அந்த குழந்தைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த குழந்தை நல்ல நிலையில் உடல் நலம் தேறிவருகிறார்." இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அவர் கூறும்போது, "மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காய்ச்சல் வார்டில் 17 குழந்தைகள், 9 ஆண்கள், 11 பெண்கள் உட்பட 37 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஓரிரு வாரத்துக்கு முன்பு, அதிகரித்திருந்த காய்ச்சல் தற்சமயம் வெகுவாக குறைந்துள்ளது. திருவாரூர் அருகே திருவாசல் கிராமத்தில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு சாப்பிட்டவர்கள், ஒரு நாள் கழித்து ஆறாம் தேதி 10 பேரும், 7ம் தேதி 9 பேரும், 8ம் தேதி (இன்று) ஒரு பெண்மணியும் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக ஆறாம் தேதி சிகிச்சைக்கு வந்த செல்வமுருகன் (24) என்ற இளைஞர் ஒரு நாள் தாமதமாக சிகிச்சைக்கு வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே பாதிப்புகள் அதிகரித்து இருந்ததால் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
ஆனால், அவர் இறப்புக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சிலர் தகவல்களை பரப்புகின்றனர். அதனை நாங்கள் முற்றிலும் மறுக்கின்றோம். அந்த இளைஞர் சிகிச்சைக்கு வந்தபோதே ரத்த அழுத்தம் அதிக அளவு இருந்தது. அவருக்கு தேவையான சிகிச்சைகளை, அதற்குரிய மருத்துவர்கள் இருந்து வழங்கினார்கள். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக பாதித்திருந்ததால் அவரது உடல் சிகிச்சையை ஏற்க வில்லை. எனவே அந்த இளைஞருக்கு உரிய சிகிச்சைகள் அழைக்கப்படவில்லை என்கின்ற தகவல் வதந்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அசைவ உணவு வகைகளை பார்த்து, பழைய கறிகள் இல்லை என்பதை உறுதி செய்து சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்னர் ஏதாவது உடல் கோளாறுகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாங்களாக மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. மேலும் உயிரிழந்த இளைஞரது உடற்கூறு ஆய்வு அறிக்கை முதற்கட்டமாக வழங்கப்பட்டு விட்டது மேலும், உறுப்புகள் எந்த அளவிலான பாதிப்பை அடைந்துள்ளன என்பது குறித்த அறிக்கையையும் போலீசாரிடம் வழங்க இருக்கிறோம்ஊ
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் புலிவலத்தில் கர்ப்பிணி பெண்ணின் சுப நிகழ்ச்சியில் உணவருந்திய இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் உணவு மாதிரியை சேகரிக்க முடியவில்லை என்றும் அந்த இரண்டு கடைகளிலும் பூட்டி இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.முதற்கட்ட மருந்து அறிக்கையில் உணவு ஒவ்வாமை என்று தெரியவந்துள்ளதாக மருத்துவ கல்லூரி முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது