கர்ப்பிணி பெண்ணிற்கு அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை மூளைச்சாவடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிறந்ததிலிருந்து குழந்தையை தனக்கு காட்டவில்லை என தந்தை புகார் தெரிவித்துள்ளார்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டிக்கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் மதன் வயது 26. இவரது மனைவி வினோதினி வயது 23. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து தனது வயிற்றில் உள்ள குழந்தையிடமிருந்து எவ்வித அசைவும் இல்லை என்று மருத்துவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் உடனே பரிசோதிக்காமல் மாலை அலட்சியப்படுத்தி மாலை 3 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் 4.52 மணிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தையை உடனடியாக சிசு தீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டுசென்று செயற்கை சுவாசத்தில் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
என் குழந்தையை காட்ட வேண்டும் என்று உறவினர்கள் மருத்துவமனைக்கு எதிரில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். குழந்தையை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர்களிடம் உறுதியளித்தனர்.
மேலும் இது குறித்து உறவினர் ஒருவர் கூறுகையில், ”நேற்று முன்தினம் காலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு வயிற்றில் குழந்தைக்கு எவ்வித அசைவும் ஏற்படவில்லை என்று பலமுறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தெரிவித்தும் அலட்சியமாக சிகிச்சை ஏதும் அளிக்காமல் இருந்ததார்கள். மேலும் அறுவை சிகிச்சைக்கான உடைகளை மாற்றிய பிறகும் வெகு நேரம் காத்திருக்க வைத்தார்கள்” என்றும் கூறினார்.
பிறகு மாலை 3 மணிக்கு மேல் அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு சென்று 5 மணிக்கு ஆண் குழந்தையும் பிறந்ததாக தெரிவித்தார்.இந்த குழந்தையை எங்கள் கண்ணில் காட்டாமல் நேராக எடுத்துச்சென்று சிகிச்சை அளித்தது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். இதனையடுத்து இன்று இரவு மருத்துவர் ஒருவர் மதனின் அம்மா மஞ்சுளாவிடம் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும் குழந்தையை பிறந்ததிலிருந்து தனக்கு காட்டவில்லை என்றும் மதன் புகார் தெரிவிக்கிறார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி மன்னார்குடி நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவர்களை குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும்,ஏற்கனவே அவர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நேற்று காலை தான் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.