காட்டுப்பன்றிகள் கட்டுப்பாடு இன்றி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது. இந்த காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளுக்கு திருவிடைமருதூர் வேளாண் உதவி இயக்குனர் கவிதா விளக்கம் அளித்துள்ளார்.
காட்டு பன்றிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, பயறு வகை, எண்ணெய் வித்து பயிர்கள், பழ மரங்கள், காய்கறி பயிர்கள் போன்றவற்றை தாக்கி சேதம் விளைவிக்கிறது. இவைகள் தங்களது உணவு மற்றும் உறைவிடத்திற்காக பயிர்களை தாக்குகிறது. இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.
வேலி அமைத்தல்
முள்வேலி அமைக்கும் போது இரண்டு அடி ஆழத்திற்கு குழி அமைத்து கல் தூண் துணை கொண்டு வேலி அமைக்க வேண்டும். இதில் ஒரு வரிசை முள்வேலியை மண்ணுக்கு கீழ் வைத்து மண் கொண்டு மூடுவதால் மண்ணைத் தோண்டி காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுவதை தடுக்கலாம்.
நாட்டுப் பன்றிகளின் சாணத்தை தெளித்தல்
நாட்டுப்பன்றி சாண கரைசலை வயலை சுற்றி ஒரு அடி அகலத்திற்கு தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் 2- 3முறை தெளிப்பதனால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முறையை பின்பற்றுவதால் ஏற்கனவே மற்ற பன்றிகள் வாழும் தோற்றத்தை உணர்ந்த காட்டுப் பன்றிகள் அங்கு வருவதை தடுக்க முடியும்.
முட்டை கரைசலை தெளித்தல்
20 மில்லி முட்டை கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வயலைச் சுற்றி தெளிப்பதால் காட்டு பன்றிகள் வயலுக்குள் இறங்குவதை தடுக்க முடியும்.
பன்றியின் சாணத்தில் ஆன வறட்டியை எரித்தல்
மாலை நேரத்தில் மண் பானைகளில் நாட்டு பன்றி சாண வறட்டிகளை நிரப்பி எரித்து புகை மூட்டத்தை உண்டு பண்ணி வறட்டியின் வாசம் நாட்டு பன்றியின் இருப்பை உணர்த்தி காற்று பன்றிகளை உள்ளே வர விடாமல் தடுக்கலாம்.
மண் எண்ணெய்யில் ஊற வைக்கப்பட்ட கயிறு கட்டுதல்
தட்டையான கயிற்றினை இரண்டு மணி நேரம் மண்ணெண்ணையில் ஊறவைத்து ஏற்கனவே உள்ள வேளையில் வயலில் சுற்றி கட்டி விட வேண்டும். மண்எண்ணை வாசம் வயலில் என்ன பயிர் உள்ளது என்பதை காட்டு பன்றிகள் அறியவிடாமல் செய்துவிடும்.
கள்ளி வகை செடிகள், ஆனை கற்றாழை, முட்கொன்றை போன்ற தாவரங்களை வெளிப்புற வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் காட்டுப்பன்றி தாக்குதலை தவிர்க்கலாம்.
வரப்பு ஓரங்களில் தக்கை பூண்டு வளர்த்தல்
தக்கைப் பூண்டின் வேர் வாசனை காட்டு பன்றிகளுக்கு பிடிக்காது என்பதால் இதனையும், ஆமணக்குச் செடிகளில் உள்ள ஆல்கலாய்டு பன்றிகளுக்கு பிடிக்காததால் இவற்றையும் வளர்த்து கட்டுப்படுத்தலாம்.
காட்டுப்பன்றியை வேட்டையாடும் விலங்குகளின் அபாய ஒலிகளை பதிவு செய்து உருவாக்கப்பட்ட ஒலிப்பான்களை பயன்படுத்தி காட்டு பன்றிகளை விரட்டலாம். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதில் கவனமுடன் செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை கையாண்டு அவற்றை கட்டுப்படுத்தி பயிர் சேதாரத்தில் இருந்து காப்பாற்றி மகத்தான மகசூலை பெறலாம்.