கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் தென்கரை சுற்றுச்சுவர் 100 மீட்டர் இடிந்து விழுந்தது. போக்குவரத்து துண்டிப்பு.

 

திருவாரூரில் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் உள்ளது. இந்தக் கோயிலில் ராஜராஜசோழன் வந்து வழிபட்டுச் சென்றதாக வரலாறு உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஐந்து வேலியும், குளம் ஐந்து வேலியும் என்ற சம நிலப்பரப்புடன் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த குளத்தின் தென்கரை, வடகரை, மேற்குக்கரை, உள்ளிட்ட நான்கு கரைகளிலும் இந்து சமய அறநிலை துறை சார்பில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் வடகரையில் மேற்குக் கரையும் இடிந்து விழுந்தது. இதற்கு காரணம் இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதே என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதிகளில் கனரக வாகனம் செல்வதற்கு அனுமதி மறுத்தது. அதன் பின்னர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய சுற்று சுவர் கட்டப்பட்டது.



இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தில் தென்கரை சுற்றுச்சுவர் 100 மீட்டர் தூரம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. அதுமட்டுமன்றி தென்கரையில் சாலைகள் முழுவதுமாக விரிசல் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை துண்டித்து உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் இடிந்து விழுந்த இடத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 




அதனையடுத்து தியாகராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பொதுமக்கள் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். மேலும் சுற்று சுவர் இடிந்து விழுந்த இடத்தில் மின் கம்பங்களும் சாய்ந்து உள்ளதால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன, உடனடியாக அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சரி செய்ய மின் வாரிய துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தப் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாததற்கு முன்னதாகவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் கமலாலயக் குளத்தின் தென்கரையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சரி செய்ய நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுற்றுச்சூவய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.