மயிலாடுதுறையில் அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் விடப்பட்ட, பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லட்சுமி, மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் உதவியுடன் கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி  277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன்  விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்கள் மெய்யநாதன் ஆகியோர் காப்பகத்திற்கு சென்று  மாணவி லட்சிமியை நேரில் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தனர். 




அப்போது அந்த மாணவி கால்களால் வரைந்த ஓவியங்களை அமைச்சர்களிடம் காண்பித்தனர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரண்டு கைகளையும் இழந்த மாணவி லட்சுமி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். இந்த மாணவி தன்னம்பிக்கையை பார்த்து மற்ற மாணவர்களும் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைந்தாலும் அதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு லட்சுமி போல் நிமிர்ந்து நிற்க வேண்டும். மாணவி லட்சுமியின் உயர்கல்விக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். மேலும், காப்பகத்திற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். 




பெற்றோர்கள் பிள்ளைகளை கடினப்பட்டு வளர்க்கின்றனர். யாரோ ஒருவருக்காக பயந்து கொண்டு சில முடிவுகள் எடுப்பது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் மாணவர்களை மதிப்பெண் கொண்டு மதிப்பிடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் அரசு அதனை வெளிக்கொணர்வதில் கடமைப்பட்டு உள்ளது. ஒவ்வொரு திறமைக்கும் ஒவ்வொரு  நாற்காலி காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.




தொடர்ந்து, அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பகுப்புகள் எந்த நிதிச்சுமை இருந்தாலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்காக சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.  விரைவில் வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில்  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்,  நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் இருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண