திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 67 நபர்களுக்கு கொரோனா தொற்று. 5 பேர் உயிரிழப்பு

 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பபு அடைந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்றைய பாதிப்பை விட இன்று கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 



இந்நிலையில் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 71 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வீடுகளுக்கு சென்ற பின்னர் 15 தினங்களுக்கு தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அவர்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஐந்து நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 332 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மற்றும் தனியார் மருத்துவமனைகள், மற்றும் அவரவர் வீடுகளில், தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 596 ஆக உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4600 நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.