திருவாரூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற் பயிர்கள் பயிரிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து அறுவடை பணிகள் என்பது நடைபெற்று நெற்பயிர்களை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 505 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெற்பயிர்களை அரசு கொள்முதல் செய்தது. இந்த அரசின் நிரந்தர மற்றும் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வரை  5 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இது சென்ற ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.காரைப் பருவம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் உள்ள 505 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது 143 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்படுகிறது.மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நெல் கொள்முதல் செய்தல், மொத்தமாக நெல் கொள்முதல் செய்தல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 25 நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக  முதுநிலை மண்டல மேலாளர் ராஜ ராஜன் தெரிவித்துள்ளார்.



மேலும் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு பணம் பெறுவதாக தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து புகார் வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜராஜன் தெரிவித்தார். தற்போது சம்பா தாளடி அறுவடை பணிகள் என்பது பெருமளவு முடிவடைந்து சம்பா நெற்பயிர்கள் மட்டும் 5 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 7 லட்சத்து 12 ஆயிரத்து 279 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காரை பருவம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால்  இந்த அளவானது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் அல்லது லஞ்சம் பெறுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக  இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த வருடம் இது போன்ற ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஆன்லைன் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த பின்னர் தங்களது நெற்பயிர்களை விற்பனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

 

இருப்பினும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுபோன்ற விவசாயிகளும் பணம் பெறும் நிகழ்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடி வரக் கூடிய சூழ்நிலையில் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தில் இருந்து லஞ்சம் பெறும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்,இது போன்று மீண்டும் நடைபெறா வண்ணம் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.