தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களை பணிக்கு அமர்த்தியது. இந்த நிலையில் மார்ச் 31 அன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று நோய்த் தொற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய வேண்டும் என்றும், பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 





மேலும் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களில் சரியான எண்ணிக்கை பெறப்பட்டு விரைவாக பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.துறை சார்ந்த அறிவு பெற்ற டெக்னீஷியன்கள் மட்டுமே அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப அவர்களின் வாழ்வாதாரம் என்பது மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.




இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு செவிலியர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்றுக்கொண்ட செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பாக இசிஜி தொழில்நுட்பனர்கள் இந்த பணியில் சேர்ந்து திறம்பட பணிபுரிந்தனர். குடும்பத்தையும் கவனிக்காமல், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கருணை அடிப்படையில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.