திருவாரூர் அருகே துர்காலயா சாலையில் தையல் கடையில் வேலை பார்த்து வருபவர் கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மேகலா (48), இவரது கணவர் வீரராகவன் (55), கட்டுமான பொறியாளர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு திருவாரூரில் தையல் கடையை பூட்டிவிட்டு வீரராகவன் அவரது மனைவி மேகலா இருவரும் கருப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அலிவலம் பகுதி அருகே தம்பதியினர் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் ஏற்கனவே மறைந்திருந்த  முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து  வீரராகவனை இரும்பு கம்பியால் தாக்கியதுடன் மேகலா அணிந்திருந்த 12 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த கணவன் வீரராகவன் சம்பவ இடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.  அந்த வழியாக வந்த நபரொருவர் பார்த்துவிட்டு அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீரராகவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். வீர ராகவனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 




தொடர்ந்து சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் மேகலாவிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்கில் வேகமாக சென்றதாக தெரிவித்தனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்,ராஜா,நிவாஸ்,ராதா ஆகிய  நான்கு நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 




இந்த விசாரணையில் நிவாஸ் என்பவருக்கும் வீரராகவனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நிவாஸ் பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரை தொடர்பு கொண்டு வீரராகவனை தாக்குவதற்கான சதித் திட்டத்தை தீட்டி உள்ளார். அதனை அடுத்து அன்று இரவு வெற்றிவேல் அரவிந்த் மணிகண்டன் ராஜா நிவாஸ் ராதா உள்ளிட்ட ஆறு நபர்கள் இந்த தம்பதியினரை தாக்கி அவர்களிடம் இருந்து 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பியோடிய வெற்றிவேல் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தம்பதியினரிடம் பறித்துச் சென்ற 12 சவரன் தங்க நகையையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.