பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் வேறு எந்த பெரிய சட்ட ஒழுங்கு பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று முதல்வர் ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட பிறகு தமிழ்நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுத்து வருகிறது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு சிக்கல்
குறிப்பாக, சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகளை கண்காணிக்கும் பிரிவு உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரவுடிகளின் வீடுகளுக்கே அன்றாடம் சென்று அவர்களை கண்காணிப்பதும் சட்டவிரோதா செயல்களில் அவர்களு ஏதும் ஈடுபடுகின்றனரா என்பதை ஆய்வு செய்வதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதி செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கையை மாவட்ட எஸ்.பிக்கள் முடுக்கி விட்டுள்ளனர்.
கேட்டகரிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ரவுடிகள் - கண்காணிப்பு வளையத்தில் சரித்திர குற்றவாளிகள்
ஏ,பி.சி. என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து எஸ்.பிக்கு ரிப்போர்ட் அனுப்ப காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளும் சந்தேகத்திற்கு உட்பட்டோரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சிக்கும் ரவுடிகள்
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தலின்படி ரவுடிகள் நடமாட்டம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளில் தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீச்சு அரிவாளை காட்டி மிரட்டல் - கம்பி எண்ணப்போகும் சண்டியர்கள்
இந்த நிலையில் கொரடாச்சேரி கூத்தாநல்லூர் மற்றும் திருவாரூர் நகர காவல் நிலைய பகுதிகளில் மது போதையில் வீச்சு அறிவாள்களோடு பொதுமக்களிடம் பிரச்சனையில் ஈடுபட்ட கொரடாச்சேரி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பிரசாத் வயது 24, நந்தகுமார் வயது 22 மேலும் கூத்தாநல்லூர் காவல் சரக பகுதியில் அருள் வயது 23 மற்றும் திருவாரூர் நகர காவல் கரகத்தில் உள்ள சஞ்சய் வயது 23 ஆகியோர் வீச்சு அறிவாளை வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் மற்றும் பொதுமக்களை அச்சமடைய செய்தல் ஆகிய குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுக்கள் மீது விசாரணை செய்து வீச்சு அறிவாள்களோடு இருந்த நான்கு பேரையும் போலீசார் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் புகார் அளிக்கலாம்
பொதுமக்களை அச்சுறுத்துவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடனும் நடந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு, திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி காட்டியுள்ளார். பொதுமக்கள் எந்த வித தயக்கமும் அச்சமும் இல்லாமல் தங்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பவர்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூர் மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.