மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து திருவாரூர் மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இந்த காரணத்தினால் விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக்கூறி தமிழகத்திலும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தமிழக சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்கு விவசாயிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாத நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நாட்டின் தலைநகர் டெல்லியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்புகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வலங்கைமான், குடவாசல், கொரடாச்சேரி, கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. 



போராட்டங்களின் தொடர்ச்சியாக திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டமும், 10 மணி அளவில் சிங்களாஞ்சேரி பகுதியில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது. இதேபோல நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற உள்ளன.