வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் நவம்பர் மாதங்களில் தொடங்கும். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ஆண்டுதோறும் இயற்கை இடர்பாடுகளை சந்திக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டம் முழுவதும் வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும், கழிவுநீர் தேங்காமல் இருக்க அந்தந்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறு-குறு வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி தரவேண்டும், இல்லையென்றால் விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் ஆகவே மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகளுக்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கூறியதாவது...
வடகிழக்கு பருவ மழையின் போது மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகளும் மற்றும் தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பானதாக இருக்கிறதா எனவும் போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை அனைத்து துறை அலுவலர்கள் தற்பொழுது ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகாமில் உள்ளவர்களுக்கு குடிநீர் உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவு பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும், முகாம்களில் கொரோனா தொற்று நிலவுகின்ற இக்காலகட்டத்தில் அதற்கேற்ப அரசு கூறுகின்ற அறிவுரைகளை கடைப்பிடிக்கின்ற வகையிலும் சுகாதார நடவடிக்கைகளை அமைத்திட வேண்டும், தேவையான இடத்தில் மின்சார வசதிகளை செய்துகொடுக்க வேண்டும், மழைநீர் தேங்கும் பகுதியில் இருந்து நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் சாலையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் கை இயந்திரங்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும், தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும், மருத்துவத் துறையினர் பாம்பு கடி உள்ளிட்ட அனைத்து மருந்துகளையும் வைத்துக் கொள்ள வேண்டும், அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்த பேரிடர் நிலைமையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜசோழன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பானுகோபன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.