குறுவை ஏக்கர் 1க்கு 35,000 ரூபாய் இழப்பீடு, நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்திட உடனே வழங்கிட வலியுறுத்தி அக்டோபர் 3ல் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முற்றுகை என பிஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் .பிஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மாவூர், பாலையூர், பின்னத்தூர், ஆண்டாங்கரை, ஆலிவலம், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர் பெரும் மழையால் சாய்ந்து அழுகத் தொடங்கி இருப்பதை நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் மாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரியில் மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டதால் இதுவரையிலும் இல்லாத அளவில் 4 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொண்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரையிலும் குறுவை அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு எந்த அடிப்படை நடவடிக்கைகளையும் முன்கூட்டி திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. செப்டம்பர் 1 முதல் காரீப் பருவ கொள்முல் அனுமதி பெற்றோம் என்று சொல்லுவது டெல்டா விவசாயிகளுடைய சாகுபடி பருவத்திற்கு முரணானது. இதனால் ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே தவிர, ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுத்துவிட்டார்கள். 




சென்ற ஆண்டு கொள்முதல் நிலையங்கள் திறந்த இடங்களில் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. குறிப்பாக நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டும் தான் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அனுமதி வழங்கி அங்கேயும் கொள்முதலை ஈரப்பதத்தை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அறுவடையும் தாமதப்பட்டுள்ளது. அறுவடை செய்ய வேண்டிய பயிர் தற்போது பெரும் மழையால் அழிய தொடங்கி இருக்கிறது. அழிவுக்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். 4 லட்சம் ஏக்கருக்குமேல் சாகுபடி பரப்பளவு கூடுதலாக இருக்கிற போது அதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏன் திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. 22 சதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் ஏன் அனுமதி பெறவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசை காரணம் காட்டி கொள்முதலை நிறுத்தி வைப்பது ஏற்க முடியாது, சென்ற ஆண்டும் குறுவைக்கு காப்பீடு மறுக்கப்பட்டது. இந்தாண்டும் பெற்ற உரிமையை தமிழக அரசு குறுவைக்கு காப்பீடு செய்ய முடியாமல் பறித்துவிட்டது. இதனால் விவசாயி அழியும் குறுவைப் பயிரை பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 




கிட்டத்தட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தற்போது பெய்து வருகிற மழையால் குறுவை அறுவடை பயிர்கள் அழிய தொடங்கி இருக்கிறது. சென்றாண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. இவ்வாண்டாவது உடன் தமிழக அரசு பொறுப்பு ஏற்று இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை குறுவை அழிந்திருக்கிற விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க முன்வர வேண்டும். 2022 சம்பா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். எனவே உடனடியாக இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். முதலமைச்சர் கொள்முதல் செய்வோம் என்று அறிக்கை விடுவதால் மட்டும் நடைபெறாது. நிபந்தனை இல்லாமல் கொள்முதல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 3ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.