தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் முழுமையாக வயலில் சாய்ந்து விழுந்துள்ளது.


 


தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு பரவலாக கனமழை பெய்தது. வல்லம், திருக்கானூர்பட்டி, குருங்குளம், பிள்ளையார்பட்டி, செங்கிப்பட்டி, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட சுற்றுப்பகுதிகளில் பெய்த கனழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.


வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் வடிகால்கள் நிரம்பி வழிந்தது. இதனால் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்து மூழ்கடித்தது. இப்பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கள்ளப்பெரம்பூர் உட்பட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறுவை அறுவடை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்து வயலில் சாய்ந்து விட்டது.


அறுவடைப்பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வழியின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்த மழை மேலும் தொடர்ந்தால் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும். விவசாயிகள் வெகுவாக நஷ்டத்திற்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்தனர்.




தஞ்சை அருகே வல்லத்தில் பெரியார் நகரில் 500க்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பெரியார் நகர் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் வடிந்து ஓடும் வடிகால்கள் தூர்ந்து போய் இருப்பதால் மழை நீர் வடிய வழியின்றி உள்ளது.


இப்பகுதியில் உள்ள மக்கள் கூலித் தொழிலாளர்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மழை நீர் தேங்கி நிற்கும் பகுதியில் குழந்தைகளும் அதிகளவில் உள்ளனர். தற்போது பல பகுதிகளில் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பெரியார் நகரில் குடியிருப்பு பகுதியை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரியார் நகருக்கு நேரில் வந்து பார்வையிட்டு உடன் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால்களை தூர்வாரி இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.