திருவாரூர் மாவட்டத்தில்  நீட் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 10 பேருக்கு மருத்துவம் சார்ந்த உயர்படிப்புகளுக்கு வாய்ப்புள்ளது. கடந்தாண்டை விட 50 சதவிகிதம் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு குறைந்துள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நடப்பாண்டு நீட் தேர்வுக்கு 320 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20 பேர் ஆப்சென்ட். தேர்வெழுதிய மற்றவர்களில் 47 பேர் 110 லிருந்து அதிகபட்சமாக 449 மார்க் வரையில் பெற்றுள்ளனர். இதையடுத்து இட ஒதுக்கீட்டின் படி 9 அல்லது 10 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு  கிடைக்க உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 19 பேர் இன்று மருத்துவ படிப்பை பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டை விட தற்பொழுது 50% மருத்துவம் சார்ந்த படிப்பில் சேரும் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், பயிற்சி வகுப்புகளை முன்னதாக நடத்த மாவட்ட கல்வித்துறை போதிய முனைப்பு காட்டாமல் அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களினால் தான் மருத்துவ வாய்ப்பு பாதிக்கு பாதியாக குறைந்து விட்டது. எனவே நடப்பு ஆண்டிலாவது நீட் தேர்வுக்கான  மாணவர்களுக்கு காலத்தில் பயிற்சி வகுப்புகளை தயார் படுத்த வேண்டியது கல்வித்துறையின் கடமையாகும் என, பெற்றோர்கள்  தெரிவித்துள்ளனர். 




நீட் தேர்வு குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 8 முதல் ப்ளஸ்2 வகுப்பு வரையிலான பாடங்களில் உள்ள கேள்விகள் தான் நீட் தேர்வில் கேட்கப்படுகிறது. இதற்கு பெரிய தயாரிப்போ, பயமோ தேவையில்லை. வகுப்பில் பாட வகுப்புகளை நன்கு கவனித்து மனதில் பதியவைத்துக்கொள்ளும் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த பயம் வேண்டியதில்லை. நீட் தேர்வு வழிமுறை, நீட் தேர்வின்போது  கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிப்பது, தேர்வு நடைமுறை, எப்படி தேர்வு நடத்தப்படுகிறது, எவ்வாறு நம்மை தயார்படுத்திக்கொள்வது, என்பன குறித்து தெரிவிக்கவும், தேர்வு  குறித்த அச்சத்தை போக்குவதற்குமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதை காலத்தில் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தால் கடந்தாண்டை விட கூடுதலான மாணவர்களுக்கு இந்த ஆண்டில் மருத்துவ கல்விக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.  தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,150 எம்பிபிஎஸ், 19 தனியார் கல்லூரிகளில் 2,900 என 8,050 சீட்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போய்விடும். 




இதைத்தவிர அரசு மருத்துக்கல்லூரியில் 200, தனியார் கல்லூரியில் 860 என பல் மருத்துவத்துக்கு இடம் உள்ளது. எனவே, சற்று சிறப்பு கவனமெடுத்து அச்சமின்றி நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி தேர்வை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். இதற்கு கல்வித்துறையோடு பிடிஏ, பள்ளி வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்குழு , தொண்டு அமைப்புகள், மூத்த கல்வியாளர்கள், ஓய்வு ஆசிரியர்கள் என ஒருங்கிணைத்து களமிறங்கினால் முதல்வர் மாவட்டத்தில் அதிக மாணவர்களை நீட் வாயிலாக வெற்றிபெற வைத்து உயர்கல்வி, மருத்துவ படிப்புகளுக்கான வாய்ப்பை கூடுதலாக ஏற்படுத்தி தரமுடியும். இவ்வாறு  ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி வகுப்புகள் என்பது சரிவர நடத்தப்படவில்லை. மேலும், நாங்கள் மாநில வழி கல்வியில் படித்து தேர்வுக்கு செல்கிறோம். ஆனால் வினாத்தாளில் அதிக அளவில் சிபிஎஸ்சி கேள்வி வருகிறது. இதனால் அதிக அளவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற முடியாமல் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆகவே நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.