மறைந்த முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி தஞ்சை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

சாமானியப் பிறப்புக்கும், சாதனை மரணத்துக்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கையானது, வரலாற்றுத் திருப்பங்கள் நிறைந்தது மட்டுமல்ல, வரலாற்றைத் திருப்புவதாக அமைந்ததும் கூட என்பதுதான் சரியான ஒன்றாகும். உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணாதுரைதான்.

தமிழக முதல்வராக காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார் அண்ணாதுரை. ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த  கா.ந.அண்ணாதுரை அரசியலில் இறங்குவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணா அல்லது பேரறிஞர் அண்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.


 





அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில்  அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும்  எழுதினார்.  அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தஞ்சையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 15ம் தேதி வியாழக்கிழமை தஞ்சையில் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து போட்டி தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி ரவுண்டானா வரை சென்றடைந்து மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை வந்தடைகிறது.

இதில் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் போட்டி நடத்தப்பட்ட உள்ளது.





போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற வயது சான்றிதழுடன் வர வேண்டும். இந்த சான்றிதழ் பெற்று வராதவர்கள் சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். சைக்கிள் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ, 5 ஆயிரம்,ரூ. 3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 4 முதல் 10ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ250  வீதம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.