திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழித்தடத்தில் உள்ள ரயில் பாதை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவானது. இவ்வழியாக உள்ள திருவாரூரிலிருந்து முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதால் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதால் துரிதப்படுத்தப்பட்டு 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டெமு ரயில் சேவையாக தொடங்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு 2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையின் காரணமாக மீண்டும் திருவாரூர் காரைக்குடி அகல ரயில்பாதை தடத்தில் சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் காரைக்குடி பாசஞ்சர் ரயில் காலையும் மாலையும் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் மறுநாள் ராமேஸ்வரத்திலிருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது.
இந்தநிலையில் முத்துப்பேட்டை எல்லைக்கு உட்பட்ட ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் கால்நடைகள் அடிக்கடி ரயில் மோதி பலியாகி வருகிறது. குறிப்பாக முத்துப்பேட்டை நகரை ஓட்டியுள்ள உப்பூர் முதல் தம்பிக்கோட்டை வரையிலான ரயில்வே தடத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆடு அல்லது மாடுகள் ரயிலில் அடிபட்டு பலியாகிவிடுகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுவதுடன் இதன் மூலம் ரயில் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் மனித உயிர் பலிகளும் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. சில தினங்களுக்கு முன்புகூட ஆலங்காடு பகுதியில் பாசஞ்சர் ரயில் மோதி ஒரு மாடும், கொய்யா தோப்பு பகுதியில் செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 மாடும் பலியாகியது. அதேபோல் கடந்த 12ந்தேதி அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் குடும்ப மன உளைச்சல் காரணமாக திருவாரூர் பாசஞ்சர் ரயில் முன்பு குதித்த போது அங்கு நின்றவர்கள் காப்பற்றினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக வாரம் ஒருமுறை வந்து செல்லும் செகந்திராபாத் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகளவில் கால்நடைகள் பலியாகி வருகிறது. இதில் முத்துப்பேட்டை ரயில் நிலையமும் ரயில் கேட்டும் சுமார் 100அடிதூரத்தில் உள்ளது கேட் கீப்பர் தங்கி இருக்கும் கட்டிடம் சுமார் 60அடி தூரத்தில் உள்ளது இந்த இடைப்பட்ட இடத்தில் அடிக்கடி கால்நடைகள் ரயில் அடிபட்டு பலியாகி வருகிறது.
இதில் இப்பகுதி தண்டவாளத்தில் ஆடு படுத்திருந்ததை பார்த்தும் அவர் விரட்டுவதில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இனிவரும் காலத்தில் இவர் கண்காணிக்க வேண்டும் அதேபோல் இவ்வழி தடத்தில் கால்நடைகள் பலியாகாமல் இருக்கும் வகையில் ரயில்வே நிர்வாகமும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் சம்பந்தப்பட்ட கால் நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக இதே போன்று கால்நடைகள் அதிகளவில் ரயில்வே தண்டவாளங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தண்டவாளப் பகுதிகளில் நாள்தோறும் அதிகளவில் விபத்துக்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும் காவல்துறையினரும் சாலையில் கால்நடைகள் அதிகளவில் நடமாடினால் கால்நடையின் உரிமையாளருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்று கால்நடைகள் உயிரிழப்பு சம்பவங்கள் என்பது தவிர்க்கப்படும். அது மட்டும் இல்லாமல் பெரிய அளவில் விபத்துக்கள் இல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.