மன்னார்குடியில் ருக்மணி குளத்தில் ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் குளத்தின் கரைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு புறத்தில் கரையில் பதிக்கப்பட்டு இருந்த கற்கள் சரிந்து விழுந்தன.


தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கலைஞர் நகர் பெற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளங்களின் கரைகள் செப்பனிடம் பணிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் ஆன திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட நான்கு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களின் கறைகளை சீரமைப்பதற்காக 10 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி குளத்தில் ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் குளத்தின் கரைகள் மேம்படுத்தும் பணிகள் கடந்த பல நாட்களாக நடைபெற்ற ஒரு நிலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு புறத்தில் கரையில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் சரிந்து விபத்துக்குள்ளாய் இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.




திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்ணாமலை நாதர் கோவில் குளம், செங்குளம், தாமரைக்குளம், ருக்மணி குளம் உள்ளிட்ட நான்கு குளங்களின் கரைகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ருக்மணி குளக்கரையின் நான்கு புறமும் கரைகள் மேம்படுத்தப்பட்டு கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிது. கடந்த சில தினங்களாக மன்னார்குடி பகுதியில் பெய்த மழையால் ருக்மணி குளத்தின் கீழ்கரையில் பதிக்கப்பட்டு இருந்த சிமெண்ட் கற்கள் பெயர்ந்து சரிந்தன. 1 கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பதிக்கப்பட்டு இருந்த சிமெண்ட் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மன்னார்குடி நகரமன்ற தலைவரிடம் கேட்ட போது கட்டுமான பணிகள் முடிவுறாத நிலையில் திடீரென பெய்த மழையால் கற்கள் சரிந்துள்ளது இது குறித்து அதிகாரிகளை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார். குறிப்பாக கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு புறத்தில் கற்கள் சரிந்து விழுந்தது மிகுந்த கேள்வியை எழுப்பி உள்ளது தரமான முறையில் கற்கள் பதிக்கப்படுகிறதா என பொதுமக்கள் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.




ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் குளத்தின் நான்கு புறங்களிலும் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் தரமான முறையில் கற்கள் பதிக்கப்படுகிறதா என்பது குறித்து அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் வைத்துள்ளனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட முழுவதும் இதே போன்று குளங்களைச் சுற்றி பராமரிக்கும் பணிகள் பல கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த ருக்மணி குளத்தில் கற்கள் பதிக்கும்பொழுது ஒருபுறத்தில் கற்கள் சரிந்து விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.