வாழவாய்க்கால் ஆற்றில் உடைப்பு ஏற்படும் பகுதியை கொட்டும் மழையில் அதிகாரிகள் குடையை பிடித்துக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். 


மாண்டஸ் புயல் நாளை இரவு கரையைக் கடக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் மேலும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 


இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏற்கனவே பெய்த மழையில் எந்தெந்த பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு இருந்ததோ அந்த பகுதிகளை உடனடியாக வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். இதனையடுத்து கடந்த மழையில் உடைப்பு ஏற்பட்ட திருவாரூர் அருகே உள்ள விஷ்ணு தோப்பு சுந்தரவிளாகம் பகுதியை இணைக்கும் வாழவாய்க்கால் ஆற்றில் கனமழையால் உடைப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட பகுதியை திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அதிகாரிகள் கொட்டும் மழையில் குடையைப் பிடித்துக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை வைத்து தெரிந்துவைத்து கொள்ளும்படியும்,வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தி வருகின்றனர். 




இதேபோன்று திருவாரூர் ஓடம்போக்கி ஆற்று பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மேலும் சட்டரஸ் அருகில் உள்ள ரெகுலேட்டர் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பது குறித்தும் வெண்ணாறு பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மேலும் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் சாக்குகள் மற்றும் 15,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மழை பாதிப்பு ஏற்படும் அனைத்து பகுதிகளும் கண்டறியப்பட்டு வருவதாகவும் பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இரவு மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பூந்தோட்டம் ஆண்டிப்பந்தல் சேந்தங்குடி கமலாபுரம் கொரடாச்சேரி கூத்தாநல்லூர் மாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது காலை முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.




மேலும் மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார் மேலும் திருவாரூர் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள கணிப்பாய்வு அதிகாரி நிர்மல் ராஜ் ஆட்சியர் அவர்கள் இன்று மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்ய உள்ள இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொட்டும் மழையில் குடையை பிடித்துக் கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள இடத்தினை நேற்று இரவு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது