கனமழையால் நிம்மேலி கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருகின்றன. 

Continues below advertisement

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குழுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 99 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர்  நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது பெய்து வந்தது.  இதன் காரணமாக சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் விதைத்து 20 நாட்களே ஆன  நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளானது.

இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர் மழை என்பது பெய்து கொண்டிருக்கிறது. இந்தத தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நிம்மேலி  கம்மங்குடி,குப்பம், சோத்திரியம், வடகுடி கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீர் வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் அழுகி பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  மேலும் குறிப்பாக இந்த பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும் இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.