தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது துறைகளை தனியார் மயமாக்கி கார்ப்பரேட்டர்களிடம் விற்க்க கூடாது. காண்ட்ராக்ட் அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும், முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், மன்னார்குடி, பேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலை சிங்களாஞ்சேரி என்கிற இடத்தில் 200க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை நிறுவனங்களில் 10 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. ரயில்வே துறையில் மட்டும் 3.25 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. ரயில்வே பாதுகாப்புத்துறையில் பத்தாயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளதால் தான், ரயிலில் நடைபெறும் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியாமல் போகிறது. அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்து வருகிறது. காய்கறி அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் மத்திய தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கையின்படி ரூபாய் 7.50 லட்சம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதால் இந்த ஊழலையும் கண்டித்து மேலும் பொது துறைகளை தனியார் மயமாக்கி கார்ப்பரேட்டர்களிடம் விற்கக் கூடாது. காண்ட்ராக்ட் அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும், முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோன்று திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயிலை திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் என்கிற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல நன்னிலம் அருகே உள்ள பேரளம் பகுதிகளும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவரைகளையும் கைது செய்தனர். மேலும் மன்னார்குடி பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200 பேரையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.