குடவாசல் அருகே நீதிமன்றத்திற்கு வந்து சென்ற ரவுடியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பல். 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை. சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் ஓனான் செந்தில். இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் வசித்து வருகிறார். ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓனாண் செந்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திருவாரூர் நீதிமன்றத்திற்கு கும்பகோணம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிலன் மற்றும் மயிலாடுதுறை பாலையூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாரதிராஜா ஆகியோருடன் காரில் வந்து விட்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட நாகலூர் என்கிற இடத்தில் இவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு சொகுசு கார் இவர்களது காரின் பக்கவாட்டில் உரசி உள்ளது.இதில் ஓணான் செந்தில் பயணித்த கார் கட்டுப்பாடை இழந்து சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் மீது ஏறி நின்றுள்ளது.

 

அதைத் தொடர்ந்து காரில் இருந்து ஓனான் செந்தில் இறங்கியவுடன் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய ஐந்து நபர்கள் ஓணான் செந்திலை சரமாரியாக தலை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் தலை முழுவதுமாக சிதைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஓணான் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்த கும்பல் வழக்கறிஞர் அகிலனையும் கை கால் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அகிலனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓணான் செந்தில் உடலை காவல்துறையினர் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இரண்டு தனிப் படைகள் அமைத்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக ஓனான் செந்தில் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாகவோ அல்லது பழி வாங்கும் நடவடிக்கையாகவோ யாரேனும் அவரை கொலை செய்துள்ளனரா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யும் போதுதான் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர் எதன் காரணமாக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.



 


மேலும் கொலை நடந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார்.இந்த நிலையில் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த சின்னப்பா என்பவர் கடந்த 2016 இல் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியான ஓனான் செந்திலை பழிக்குப் பலியாக சின்னப்பாவின் மகன் கூலிப்படைய வைத்து கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள்  சீனிவாசன்  ராஜசேகர் மற்றும் அருள்மணிகண்டன் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த  கலியமூர்த்தி மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரை குடவாசல் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.