அடமான கடனை கட்டி முடித்த நபர் இறந்தபிறகும் கூட அவரது அசல் பத்திரத்தை தர மறுக்கும் லட்சுமி நாராயணா நகர கூட்டுறவு வங்கிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மடப்புரம் முடுக்கு தெரு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் திருவாரூர் விஜயபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா கூட்டுறவு நகர வங்கியில் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 3.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடனை திருப்பி அடைத்த பிறகும் அவரது அசல் பத்திரத்தினை கூட்டுறவு வங்கி திருப்பி தர மறுத்ததின் காரணமாக அவரது மனைவி கஸ்தூரி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு கடனை திருப்பி செலுத்தி முடித்ததற்கான நோ டியூ சர்டிபிகேட்டை அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கஸ்தூரியின் கணவர் குணசேகர் பெயரில் உள்ள அசல் கிரய ஆவணத்தை ஒரு மாத காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் வங்கியால் புகார்தாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவுத் தொகையாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்