தமிழகம் முழுவதும் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளில் முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதன் அடிப்படையில் திருவாரூரில் கடந்த வாரம் கேரளா ஸ்டோரி, பர்ஹானா, புர்கா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பர்ஹானா திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தைலம்மை திரையரங்கில் பர்ஹானா திரைப்படம் இன்று மாலை 6 மணிக்கு திரையிடப்பட விருந்தது.



 

இந்த படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக திருவாரூரில் பர்ஹானா திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று காலை முதல் 20க்கும் மேற்பட்ட போலீசார் திரையரங்க வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்த நிலையில் பர்ஹானா படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திருவாரூர் தைலம்மை திரையரங்கில் இந்த படத்திற்கான காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண