பயிர் காப்பீடு முறையாக கணக்கீடாததற்காக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு 5 லட்சத்து 89 ஆயிரத்து 646 ரூபாய் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரி பாலசுப்பிரமணியன் சுப்புலட்சுமி செல்வி கிருத்திகைவாசன் ஆகியோர் தங்களுக்கு 2020, 2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு முறையாக வழங்கப்படவில்லை என்று கூறி கடந்த மே மாதம் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். மேலும் மருதூர் கிராமத்தில் அப்போது மழை வெள்ள சேதத்தை ஆய்வு செய்த தமிழக அரசு 70% பாதிப்பு என நிர்ணயம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரி தனது 5 ஏக்கர் நிலத்திற்கு பயிர் காப்பீடு தொகையாக 2381 ரூபாய் பிரிமியமாக செலுத்தியுள்ளார். இதில் ஒரு ஏக்கருக்கு அவருக்கு 22,479 ரூபாய் காப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அவரது வங்கி கிளையில் 26 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக ஓவர் இன்சூரன்ஸ் ரிஜக்ட்டடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று சுப்புலெட்சுமி என்பவர் 1.41 ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு பயிர் காப்பீடு செய்து இருந்த நிலையில் அரசு 70% பாதிப்பு என அறிவித்த பின்பு ஆய்வு செய்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் 1.3 ஹெக்டேர் நிலத்தில் மட்டும் விவசாயம் செய்துள்ளதாக கூறி காப்பீடு தொகை வழங்கியுள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் 64,626 ரூபாய் மட்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 73 ஆயிரத்து 171 ரூபாய் ஹெக்டேர் அளவு குறைக்கப்பட்டதால் வழங்கப்படவில்லை.
அதே கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது 1.90 ஹெக்டேர் நிலத்திற்கு பயிர் காப்பீடு செய்துள்ளார். இந்த அளவினை அதிகாரிகள் 0.25 ஹெக்டர் நிலத்தை குறைத்து காப்பீடு தொகை வழங்கி உள்ளனர். இவரது வங்கி கணக்கில் 92,861 ரூபாய் மட்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 ஆயிரத்து 69 ரூபாய் 0.25 ஹெக்டர் குறைக்கப்பட்டதால் வழங்கப்படவில்லை. அதேபோன்று செல்வி என்பவர் தனது 1.78 ஹெக்டேர் நிலத்திற்கு பிச்சன்கோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக பயிர் காப்பீடு செய்துள்ளார். அவருக்கும் வருவாய் துறை அதிகாரிகள் 0.28 நிலத்தை குறைத்துக் காட்டியதால் காப்பீடு தொகை ஒரு லட்சத்து 177 ரூபாய் வர வேண்டிய நிலையில் 11,250 ரூபாய் குறைவாக வந்துள்ளது. அதேபோன்று மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகை வாசன் 0.58 ஹெக்டேர் நிலத்திற்கு பிச்சன்கோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் காப்பீடு செய்துள்ளார். அவருக்கு 26 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 0.18 ஹெக்டேர் அளவினை அதிகாரிகள் குறைத்துள்ளதால் 5,000 ரூபாய் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மேலமருதூர் கிராமத்தை சேர்ந்த இந்த ஐந்து விவசாயிகளும் தங்களுக்கு உரிய முறையில் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த மூன்று மாதமாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை 90 நாட்களுக்குள் விசாரித்து நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி மற்றும் லட்சுமணன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யும் போது எத்தனை ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார்கள் என்று பார்க்காமல் அரசு மேல மருதூர் கிராமத்தில் 70% பயிர் பாதிப்பு என்று அறிவித்த பிறகு மாவட்ட வருவாய் அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து நான்கு விவசாயிகளுக்கு ஹெக்டேர் அளவை குறைத்துள்ளனர். மேலும் குறைத்த அளவிலான நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்யவில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. குமாரி என்பவருக்கு டபுள் என்ட்ரி என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதே போன்று அவருக்கு ரீமார்க்சில் ஓவர் இன்சூரன்ஸ் ரிஜெக்டட் என்று குறிப்பிட்டுள்ளனர்.அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
மேலும், விவசாயிகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தும் புகார் தாரர்களை காக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியர், வேளாண் இணை இயக்குனர் ஆகியோர் இருந்தது சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது. எனவே சுப்புலட்சுமி என்கிற விவசாயிக்கு 73,171 ரூபாய் காப்பீடு தொகையும் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்காக ஒரு லட்ச ரூபாயும் வழக்கு செலவுக்காக 10,000 வழங்க வேண்டும். குமாரி என்கிற விவசாயிக்கு ஒரு லட்சத்து 11,151 ரூபாய் பயிர் காப்பீடு தொகையும் மன உளைச்சல் பொருள் நஷ்டம் மற்றும் சேவை குறைபாட்டிற்காக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடும் பத்தாயிரம் வழக்கு செலவு தொகையும் வழங்க வேண்டும். பாலசுப்பிரமணியன் என்கிற விவசாயிக்கு 14 ஆயிரத்து 69 ரூபாய் பயிர் காப்பீடு தொகையும் இழப்பீடாக 50,000 வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். செல்வி என்கிற விவசாயிக்கு 11,255 ரூபாய் காப்பீடு தொகையும் 50,000 ரூபாய் இழப்பீடும் பத்தாயிரம் வழக்கு செலவு தொகையும் வழங்க வேண்டும். கிருத்திகை வாசன் என்கிற விவசாயிக்கு 5 ஆயிரம் ரூபாய் பயிர் காப்பீடு தொகையும் இழப்பீடு தொகை 25 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மொத்தம் ஐந்து விவசாயிகளுக்கும் சேர்த்து பயிர் காப்பீடு மீதத் தொகையான 2,14,646 ரூபாயும் பொருள் நஷ்டம் மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 5 பேருக்கும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ஐந்து லட்சத்து 89 ஆயிரத்து 646 ரூபாயை மாவட்ட ஆட்சியர் வேளாண் இணை இயக்குனர் இஃப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு கழக முதுநிலை மேலாளர் பிச்சன்கோட்டகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தோ இந்த உத்தரவு பிறப்பித்து நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.