தஞ்சை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு நிதி உதவியை வழங்கி அதற்கான வங்கி ஏடிஎம் கார்டுகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து தஞ்சாவூரில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில், முதல்வரின் நிகழ்ச்சி காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து முதற்கட்டமாக ப்ளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகளில் பயிலும் 472 மாணவிகளுக்கு உடனடியாக, அந்த மாணவிகளின் வங்கி கணக்கு, அதற்கான ஏடிஎம் கார்டுகள் ஆகியவை வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் சிலர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்ட நடமாடும் ஏடிஎம் இயந்திரங்களில் தங்களது வங்கி கணக்குக்கு பணம் வந்துள்ளதா என சரிபார்த்தும், சில மாணவிகள் ரூ.1000 ரொக்கப்பணத்தையும் எடுத்தனர்.