திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தபடாமல், ஒரு சிறு தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனையில் இருந்து நேரடியாக தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடமானது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே உள்ளது.


மேலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ கழிவுகள் உட்பட  அனைத்து மருத்துவக் கழிவுகளும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் அந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்திய உடைகள், மருந்துகள், சிரஞ்சுகள்  உட்பட அனைத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனை ஆடுகள், மாடுகள், நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் உண்டு வருகின்றன. 




 
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த மருத்துவ கழிவுகள் மர்மநபர்களால் கொளுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதுமே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. அந்த பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமலும் மூச்சுவிட முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது செய்தியாளர்கள், அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜிடம் "திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள் அனைத்தையும் விதிகளை பின்பற்றி முறையாக அப்புறப்படுத்த வேண்டும்" என  அறிவுறுத்தினார்.





ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு  பின்பும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுகள் பொதுவெளியில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு நள்ளிரவில் கொளுத்தப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.